ரோஹிஞ்சா அகதிகள் ஐ. நா. பொறுப்பில்



இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்து தற்போது நாட்டில் தங்கியுள்ள 32 ரோஹிஞ்சா அகதிகள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பொறுப்பில் இரத்மலானையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் உள்ளிட்ட 32 ரோஹிஞ்சா அகதிகள், மிரிஹான தடுப்பு முகாமில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், ஐ. நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, 32 அகதிகளும் இரத்மலானை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான உடன்பாடு ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்திற்கும் இலங்கை அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த அகதிகளுக்கு வேறொரு நாட்டில் அரசியல் புகலிடத்தைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஐ. நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் ஈடுபட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்களுக்கு ஐ. நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் மூலம் அரசியல் புகலிடம் கிடைக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
எனினும், ஐ.நா. அகதிகளுக்கான சர்வதேச கொள்கைப் பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடாததால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
அகதிகளின் நலன்களைக் கருத்திற்கொண்டு, அவர்களைத் தனி இடத்தில் வைத்துப் பராமரிக்கும் விடயத்தில் இலங்கை அரசுக்கும் ஐ. நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த போது ரோஹிஞ்சா யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் சேவையில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
விசாரணைகள் உரியவாறு முன்னெடுக்கப்பட்ட பின்னர் சட்ட மா அதிபர் ஊடாக அவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.