அம்பேவெல பால் உற்பத்தி நிறுவன கழிவுகளுக்கு எதிராக





(க.கிஷாந்தன்)

அம்பேவெல தேசிய பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் மேலதிக பசும்பாலும், கழிவுகளும் அம்பேவெல ஓயாவில் கலப்பதனால் ஓயாவை பயன்படுத்தும் வெலிமடை பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்பு அம்பேவெல மில்கோ நிறுவனத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இவ்வார்ப்பாட்டம் 30.09.2017 அன்று காலை முதல் மதியம் வரை முன்னெடுக்கப்பட்டது.

அம்பேவெல மில்கோ நிறுவனத்திலிருந்து வெளியேறப்படும் கழிவுகள் குறித்த ஆற்றில் கலப்பதனால் இவ் ஆற்றிலிருந்து பயன் பெரும் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சுமார் 1500 ஏக்கர்கள் விவசாய நிலப்பரப்புக்கு மேற்படி ஆற்றிலிருந்து நீர் பெற்றுக்கொள்ளப்படுகின்ற அதேவேளை ஆற்றை பயன்படுத்தும் விவசாயிகளின் அறுவடைகள் பாதிக்கப்படுகின்றது.
கறுப்பு கொடிகளையும், சுலோகங்களையும் ஏந்திய ஆர்ப்பாட்டகாரர்கள், “இலாபம் உமக்கு சோகம் எமக்கு, நாட்டிற்கு போசனையான பால் எமக்கு கழிவு பால், நாட்டின் அபிவிருத்திக்கு நாம் தடை இல்லை ஆனால் எமது விவசாயத்திற்கு தலை போடதே அரசே, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டகாரர்கள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் அம்பேவெல மில்கோ நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

குறித்த நீர் மாசடைவதனால் சிறு பிள்ளைகள், குழந்தைகள், கால்நடைகள், பூந்தோட்ட விவசாயிகள் போன்றோரும் இதன்போது பாதிப்புக்குள்ளாகுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷம் எழுப்பினர்.

குறித்த சூழல் பிரச்சினை நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும், வெலிமடை பிரதேச செயலகத்தின் கவனத்திற்கும் தாம் பலமுறை அறிவித்திருந்தும், உரிய பலன் கிடைக்கவில்லை என மக்கள் சுட்டிக்காட்டினர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த நிறுவனத்தின் நுழைவாயிலை கடக்க முற்பட்ட போது பொலிஸாரின் தலையீட்டில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அவ்விடத்திற்கு சமூகமளித்த குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்ட விவசாய அங்கத்தவர்களிடம் சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தையிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

இப்பேச்சுவார்த்தைக்கு ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன, அகில இலங்கை தொழிலாளர் சங்க செயலாளர் நாமல் கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் இறுதியில் மில்கோ நிறுவனத்தின் செயற்பாட்டு அதிகாரி, “எமது நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் மேலதிக பாலையும், கழிவு நீரையும் சுத்திகரித்து வெளியேற்றும் நடவடிக்கையை எடுப்பதற்கான அனைத்து வேலைப்பாடுகளும் நிறைவடைந்துள்ளது. எதிர்வரும் 4ம் திகதியிலிருந்து இதை நாம் செயற்பாட்டிற்கு கொண்டு வருவோம். அதனை தொடர்ந்து குறித்த நீர் ஓடையை சம்மந்தப்பட்ட துறையினருடன் தொடர்புற்று சுத்திகரிப்பு செய்வதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்” என செயற்பாட்டு அதிகாரி தெரிவிக்கவே ஆர்ப்பாட்டகாரர்கள் மேற்படி விடயத்திற்கு இணக்கம் தெரிவித்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதோடு, 200ற்கும் மேற்பட்ட நுவரெலியா கலகதடுப்பு பிரிவினரும், பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.