இலங்கையில், மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீடு முற்றுகைக்குள்ளான சம்பவம் தொடர்பாக பெண் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் காவல் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் கொழும்புக்கு அருகிலுள்ள கல்கிசை என்னுமிடத்திலுள்ள வீடொன்றில் ஐ.நா. அகதிகளுக்கான ஆணையத்தின் மேற்பார்வையில் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் 31 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அந்த இடம் பௌத்த துறவிகள் உள்ளிட்ட கடும் போக்கு பௌத்தர்கள் குழுவொன்றினால் முற்றுகைக்குள்ளானதையடுத்து ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக ரோஹிஞ்சாக்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்போது காலி பூசா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக போலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரனையின் பின்னர் மொரட்டுவ பகுதியை சேர்ந்த 34 வயது நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அவரது வீடடில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நபர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் பொது ஜன பெரமுன சார்பில் போட்டியிட்டவர் என தெரியவந்துள்ளது.
மற்றுமொரு சந்தேக நபரான பெண் ஒருவர் இன்று சனிக்கிழமை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று சனிக்கிழமை கல்கிசை மஜிஸ்திரேட் முன்னிலையில் இவர் ஆஜர்படுத்தப்படவிருப்பதாக போலிஸ் ஊடகப் பிரிவு கூறுகின்றது.
ரோஹிஞ்சா
சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கல்கிசை நீதிமன்றத்தினால் இரு பௌத்த துறவிகள் உட்பட மூவருக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள காலி பூசா தடுப்பு முகாமிற்கு அண்மித்த பகுதியில் ஆர்பாட்டங்களக்கு காலி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடும்போக்கு பௌத்தர்கள் அந்த இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் காவல் துறையால் இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment