ASP துஷார தலுவத்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை



ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, நபர் ஒருவரை தாக்கிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே கூறியுள்ளார். 

தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை பொலிஸ் ஆணைக்குழுவினால் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். 

அதன்பின்னர் அந்தக் குற்றப்பத்திரிகை பொலிஸ் மா அதிபரினால் துஷார தலுவத்தவுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவினால் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் அந்த விசாரணை நடத்தப்பட்டிருந்தது. 

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொதுமக்கள் முறைப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் எம். மொரகல்லவின் தலைமையிலான மூவரடங்கிய குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. 

குறித்த சம்பவம் இடம்பெற்றதைன் பின்னர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்த மாத்தறை பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவினாலும் இது தொடர்பான விசாரணை இடம்பெறுகின்றது.