(Pakistan beat Sri Lanka 2nd T20 Abu Dhabi 2017)
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி இறுதிக்கட்டத்தில் வெற்றிவாய்ப்பை பறிகொடுத்தது.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 42 ஓட்டங்கள் பெற்றிருந்த போது, இலங்கை அணியின் முதலாவது விக்கட் வீழ்த்தப்பட்டது. டில்ஷான் முனவீர 19 ஓட்டங்களுடன் ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த சதீர சமரவிக்ரம மற்றும் தனுஷ்க குணதிலக ஜோடி சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தது. இலங்கை அணி ஒரு கட்டத்தில் 106 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து துடுப்பெடுத்தாடி வந்தது. சதீர சமரவிக்ரம 32 ஓட்டங்களுடன் பெவிலியனுக்கு திரும்ப, தனுஷ்க குணதிலக 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்நிலையில் அடுத்தடுத்த ஓவர்களில் தொடர்ந்து விக்கட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 20 ஓவர்களள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் சார்பில் அபாரமாக பந்து வீசிய பஹிம் அஷ்ரப், இருபதுக்கு-20 போட்டிகளில் ஹெட்ரிக் விக்கட்டுகளை கைப்பற்றிய முதலாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை நேற்று பெற்றிருந்தார். இவர் 19வது ஓவரின் 4ம், 5ம் மற்றும் ஆறாவது பந்துகளில் இசுறு உதான, மஹேல உடவத்த மற்றும் தசுன் சானக ஆகியோரின் விக்கட்டுகளை வீழ்த்தி ஹெட்ரிக்கை கைப்பற்றினார்.
பின்னர் இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. எனினும் இலகுவான வெற்றியிலக்கை கடினப்படுத்திய இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் விக்கட்டுகளை சரியான சமயத்தில் சரித்ததுடன், ஓட்டங்களையும் மட்டுப்படுத்தினர்.
இதனடிப்படையில் 19 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது. இறுதிப்பந்து ஓவரை வீசிய விகும் சஞ்சய முதலாவது பந்தில் பஹிம் அஷ்ரப்பின் விக்கட்டினை வீழ்த்த வெற்றிவாய்ப்பு இலங்கை பக்கம் திரும்பியது.
அடுத்த பந்தில் சதாப் கான் ஒரு ஓட்டத்தை பெற்றுக்கொடுக்க, 3வது பந்தில் ஹசன் அலி அடித்த பந்தின் பிடியெடுப்பை லோங் ஓப் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்ட தனுஷ்க குணதிலக்க நழுவவிட்டார். இதனால் அந்த பந்துக்கு 3 ஓட்டங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் 3 பந்துகளுக்கு 8 ஓட்டங்கள் என போட்டி விறுவிறுப்படைய, 4வது பந்தில் சதாப் கான் 6 ஓட்டம் ஓன்றை பெற்றுக்கொடுத்து இலங்கையின் வெற்றிவாய்ப்பை தட்டிப்பறித்தார். 2 பந்துகளுக்கு 2 ஓட்டங்கள் என்ற நிலையில் சதாப் கான் 5வது பந்தில் 2 ஓட்டங்களை பெற்று, பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதனால் 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக சதாப் கான் தெரிவுசெய்யப்பட்டதுடன், 3வது இருபதுக்கு-20 போட்டி பாகிஸ்தானின் லாஹுர் நகரில் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment