களுத்துறை, மாத்தளை, கண்டிக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை:



பலத்த மழை காரணமாக களுத்துறை, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவிற்கான அறிகுறிகள் தென்படுமாயின் குறித்த பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
இன்றும் நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றமையினால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கண்டி – பகத்ததும்பர, அலகொள்ள தோட்டத்தில் நேற்றிரவு பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக சுமார் 30 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
அலகொள்ள தோட்டத்திலுள்ள 25 லயன் குடியிருப்புகள் காற்றுடன் கூடிய மழையினால் பகுதியளவில் சேதமைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இதேவேளை, மாத்தளை – தம்பகளை தோட்டத்தில் நேற்றிரவு பெய்த கடும் மழையினால் 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
நேற்றிரவு இந்த பகுதியில் கடுங்காற்று வீசியமையினால் 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்திலும் தொடர்ச்சியாக கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒஹிய மற்றும் இதலகஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடைப்பட்ட ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயில் ஒஹிய ரயில்வே நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நேற்றிரவு கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயில் கலஹின்ன பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் பயணித்த பயணிகள் தொடர்ந்தும் ரயிலிலேயே தங்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.
இன்று காலை முதல் நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருகின்றது.