பிணைமுறி மோசடி:மூவரடங்கிய குழுவின் அறிக்கை



இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ சம்பந்தப்பட்டு உள்ளனரா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை, இன்று (29), கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.   
வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தலைமையிலான மேற்படி மூவரடங்கிய குழுவினால், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.   
இந்த அறிக்கை தயாரிப்பின் போது, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட ஆணவம் குறித்து கருத்தில் எடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆவணம் தொடர்பில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஸ் டீ சில்வா, காமினி மாரப்பன மற்றும் ஃபைஸர் முஸ்தபா ஆகியோரது மேற்​பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.  
பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ தொடர்புபட்டுள்ளார்களா எனக் கண்டறிவதற்காகவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், மேற்படி குழு நியமிக்கப்பட்டது.   
கடந்த 17ஆம் திகதியன்று, ஐ.தே.கவின் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில், ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டத்தின் போது, மேற்படி மூவரடங்கிய குழு நியமிப்பதான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது