திருடர்களைப் பாதுகாத்தமையின் காரணமாகவே மக்கள் சிறந்த பாடத்தை அரசுக்குப் புகட்டினர். திருடர்களுடன் ஆட்சி அமைக்க ஒன்று சேர்ந்தால் மேலும் பெரிய பாடத்தை மக்கள் அரசுக்குப் புகட்டுவர் என்று முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
காலஞ்சென்ற பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் நினைவு தினத்தை முன்னிட்டுக் கட்டுநாயக்கவில் உள்ள அவரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
‘உங்களது மகனை அரசியலில் களமிறக்குவீர்களா?’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, என்னுடைய மகனை அரசியலுக்குக் களமிறக்கித்தான் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது இல்லை. நான் குடும்ப அரசியலைச் செய்ய வேண்டியதில்லை. மாமா, தம்பி, அண்ணா, தங்கை ஆகியோரை அரசியலுக்கு அழைத்து வர வேண்டியதில்லை. கொள்ளை அடிக்க வருபவர்களே குடும்பத்துடன் அரசியலுக்கு வருகின்றனர். தற்போது ஒரு சிலர் அப்படி செய்து வருகின்றனர் என்று பதில் வழங்கினார்.
‘தேர்தல் முடிவுகள் தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?’ என்று எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு, திருடர்களைப் பாதுகாத்தமையின் காரணமாகவே மக்கள் சிறந்த பாடத்தை அரசுக்குப் புகட்டினர். இந்த நிலையில் திருடர்களுடன் ஆட்சி அமைக்க ஒன்று சேர்ந்தால் பெரிய பாடத்தை மக்கள் புகட்டுவர் -– என்றார்.


Post a Comment
Post a Comment