அனுமதிப்பத்திரமில்லாத உள்ளுர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது



(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியுடன் இன்று (28) வீட்டு உரிமையாளரை கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த அப்துல்கரீம் ஹூஸைன் (43வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கிராமமக்களுடன் முரண்படுகின்ற போது துப்பாக்கியால் சூடு வைப்பதாக பயமுறுத்தி வருகின்ற நிலையில் பொலிஸார் இவர் தொடர்பில் இரகசிய விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதேவேளை  தொலைபேசி மூலம் இவர் தொடர்பாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 எனும் இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அவரது வீட்டை சுற்றிவளைத்த போது வீட்டுக்குள் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கியொன்று  மீட்கப்பட்டதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன்  பல வருடங்களாக மிருக வேட்டையில் ஈடுபட்டு வருபவர் எனவும் தெரியவந்துள்ளது.



துப்பாக்கி தொடர்பில் வீட்டு உரிமைாளரை கைது செய்ததுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.