அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டுமென்றால் தான் ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும்


அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டுமென்றால் தான் ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும் என இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுத் தலைவரின் கருத்துக்கள் ஒரு தரப்பிற்கு சாதகமாகவோ, பாதகமாகவோ இருக்கக் கூடாது என்பதால் அநேக விடயங்களில் மௌனத்தைக் கடைப்பிடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிபிசி சிங்கள சேவைக்கு தேர்தல் ஆணையாளர் வழங்கிய நேர்காணல், சமூக வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பானபோது, பொதுமக்களின் கேள்விகளுக்கும் தேர்தல் ஆணையாளர் பதிலளித்தார்.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இதன்போது தேர்தல் ஆணைக்குழுவின் கருத்து என்னவாக இருக்கும் என்பது குறித்தும் தேர்தல் ஆணையாளர் இதன்போது விளக்கமளித்தார்.
தேர்தல் ஆணையாளருடன் நடத்தப்பட்ட நேர்காணலின் முக்கியமான கேள்வி பதில்களை கீழே காணலாம்.
பொதுத் தேர்தலை நடத்த நீங்கள் தயாரா?
பதில்: தேர்தல் ஆணைக்குழு தற்போது தயாராக இருக்கிறது. நவம்பர் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. வேட்புமனு கோரலுக்கான முதற்கட்ட பணிகள் நடக்கின்றன.
எதிர்பாராத நேரத்தில் தேர்தல் வந்துள்ளது. இப்படி நடந்தால் தேர்தல் ஒன்றை நடத்த முடியுமா?
தேர்தல் ஆணைக்குழு எந்தவொரு தேர்தலுக்கும், எந்தவொரு நேரத்திலும் தயாராகவே இருக்கிறது. அதனை நான் எப்போதும் கூறுவதுண்டு. கடந்த பொதுத் தேர்தலில் 53 நாட்கள் மட்டுமே கால அவகாசம் இருந்தது. இம்முறை 55 நாட்கள் அதாவது இரண்டு நாட்கள் மேலதிகமாகவே இருக்கிறது. அதிகாரிகள் அனைத்தையும் செய்து முடிப்பர்.
மாகாண சபைத் தேர்தல் வருமெனவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொதுத் தேர்தல் வந்திருக்கிறது. வித்தியாசம் இருக்கிறதல்லவா?
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் தயார் நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழு இருந்தது. மாகாண சபைத் தேர்தல் நடக்காது குறித்து கவலையடைகிறோம்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சிகள் சில உங்களிடம் கேட்டிருந்தன. நீதிமன்றத்தின் கருத்தை அறியவுள்ளதாக நீங்கள் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. உங்களின் நிலைப்பாடு என்ன?
தேர்தல் ஆணைக்குழு கூடியபோது மூன்று தலைமை அதிகாரிகள் இடையே வெவ்வேறான தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தன. எனினும், எம்மிடையே ஒருங்கிணைந்த தீர்மானமொன்றும் இருக்கிறது. நாடாளுமன்றம் கலைப்பு குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம், சரியென்றோ, பிழையென்றோ தேர்தல் ஆணைக்குழு என்ற வகையில் எதனையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்போவதில்லை. தேர்தலில் போட்டியிட்ட ஆறு கட்சிகள் இருக்கின்றன. இவற்றில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் சட்டரீதியானது எனக் கூறுகின்றன.
இலங்கை அரசியல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகிய கட்சிகள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் பிழையெனக் கூறுகின்றன. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதனையும் எமக்கு அறிவிக்கவில்லை. எனினும், இவர்களின் நிலைப்பாடு குறித்து தேர்தல் ஆணைக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டால் ஏதோ ஒருதரப்பிற்கு அது சாதகமாகவும், மற்றைய தரப்பிற்கு பாதகமாகவும் அமையும். அதனால் அதிகாரபூர்வமாக எதனையும் கூறமுடியாது. எனினும், பிழையெனக் கூறும், மூன்று அரசியல் கட்சிகள் நீதிமன்றம் செல்வதாகக் கூறியுள்ளன. நீதிமன்றம் என்ன கூறுகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
நீதிமன்றம் செல்லும்போது தேர்தல் பணிகளில் தடங்கல் ஏற்படுமா? வேட்பு மனுத் தாக்கலுக்கு குறைந்த கால அவகாசமே இருக்கிறது.
''தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஏன் முன்னெடுக்கிறீர்கள் என சிலர் கேட்கின்றனர். நீதிமன்றத்தில் தடை உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டால், எமது பணிகளை நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் கால அவகாசம் போதாமல் போகும். அதனால் நீதிமன்றம் பதில் கூறும் வரை எமது பணிகளை முன்னெடுப்போம்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டரீதியானது என அரசாங்கத் தரப்பு கூறுகிறது. நீங்களும் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்கிறீர்கள். ஆகவே அரசாங்கத்தின் நிலைப்பாட்டில்தான் நீங்கள் இருக்கிறீர்களா?
''யாராவது நீதிமன்றத்திற்குச் சென்று, தீர்ப்பொன்று வரும் வரையில் நாம் எமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.''
சட்டரீதியற்ற உத்தரவொன்ற அரச அதிகாரியொருவர் ஏற்க வேண்டுமா என சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்புகின்றனர். எனவே, தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு சென்று கருத்தைப் பெற முடியாதா?
''உயர்நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெறும் உரிமை ஜனாதிபதிக்கு மட்டுமே இருப்பதாக பெரும்பாலானோர் நினைக்கின்றனர். தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெறவில்லை எனக் கூறுகின்றனர். ஆனால், தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தவில்லை என்றால், அதற்கு எதிராக வழக்குப் பதிவுசெய்து தீர்ப்பைப் பெறுமாறு நாம் கூறுகிறோம். மாகாண சபைத் தேர்தல் தாமதமாவது குறித்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், தேர்தல் ஆணைக்குழு பக்கம் பிழை எதுவும் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஜனாதிபதி பதவிக் காலம் குறித்து ஜனாதிபதி நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டார். முன்னாள் ஜனாதிபதியும் இதனைச் செய்திருந்தார். எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கு முன்னதாக உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டிருந்தால் இந்த சிக்கலைத் தவிர்த்திருக்கலாம் என நீங்கள் நினைக்கவில்லையா?
''நல்ல கேள்வி. தேர்தல் கண்காணிப்பாளர்களும் இதுகுறித்து 26ஆம் திகதிக்கு முன்னர் கேள்விகளை எழுப்பியிருந்தனர். எனினும், நான் அநேக நேரங்களில் சில பதில்களைக் கூறுவதுண்டு. பதிலளிப்பைத் தவிர்த்துக் கொள்கிறேன், கருத்து எதுவும் கூற விரும்பவில்லை, மௌனமாக இருக்கிறேன் என்ற பதில்களையே பெரும்பாலும் வழங்குவேன்.
நான் பதில் ஒன்றை வழங்கினால் ஏதேனும் ஒரு தரப்பிற்கு சாதகமாகவோ, பாதகமாகவோ இது முடியக்கூடும் என்பதால் இந்த வழிமுறையைக் கையாளுகின்றேன். இதனைக் கூறினால் அநேகர் என்னைத் திட்டுவதும் உண்டு. பதில் ஒன்று இருக்கும். ஆனால் அதனை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்க முடியாது. ஆனால் மகிந்த தேசப்பிரிய என்ற ஒரு தனிநபரினால் கருத்துகூற முடியும். எனினும், மகிந்த தேசப்பிரிய என்பவர் இங்கு முக்கியமானவர் அல்ல.
சரியான, நியாயமான விடயத்திற்கு குரல்கொடுக்க ஏன் முடியாது என சமூக வலைத்தளத்தில் ஒருவர் கேள்வியொன்றைப் பதிவுசெய்துள்ளார்.
''நியாயமான விடயத்திற்காகவே பணியாற்றுகிறோம். நாம் சரியாக, நியாயமாக செயற்பட்டோம் என்பது இறுதியாகத் தெரியும்.
தேர்தல் தினத்தையும், வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தையும் ஜனாதிபதி எவ்வாறு முடிவுசெய்ய முடியும் என ஒருவர் கேள்வியெழுப்புகிறார். இதுகுறித்து ஜனாதிபதி உங்களுடன் பேசினாரா?
நாடாளுமன்ற தேர்தல் சட்ட அதிகாரங்களுக்கமைய, நாடாளுமன்றம் கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில், கலைக்கப்பட்ட நாள் முதல் 10 முதல் 16 நாட்களுக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதும், அன்றிலிருந்து 5 முதல் 7 வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்பதும், நாடாளுமன்றம் எப்போது கூட்டப்படும் என்பதும் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது.
இலங்கை அரசியல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அன்றைய தினம் (நவம்பர் 9) இரவு 8-9 மணிக்கு இடைபப்பட்ட நேரத்தில் இதுகுறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும் எனக் கூறினார்கள். அப்போது நான் சென்றேன். அங்கு வர்த்தமானி அறிவித்தலை நான் பார்த்தேன். எனினும், தேர்தலை நிர்ணயிப்பது குறித்து எம்மிடம் கருத்து கேட்கப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
ஜனாதிபதி தேர்தலை மட்டுமா தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தீர்மானிப்பார்?
''ஜனாதிபதித் தேர்தலைத் தீர்மானிக்க முடியும். அதேபோல், மாகாண, உள்ளுராட்சித் தேர்தல்களையும் தீர்மானிக்க முடியும். நாடாளுமன்றத்தைக் கலைத்தால் அதுகுறித்து தன்னிச்சையாக எமக்கு முடிவெடுக்க முடியாது.
தேர்தல் ஆணைக்குழுத் தலைவரை (உங்களை) நீதிமன்றத்திற்கு அழைத்தால் உங்களின் கருத்து என்னவாக இருக்கும் என ஒருவர் கேட்கிறார்.
''உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கமைய பணியாற்றுவோம் எனக் கூறுவேன். வரைவிலக்கணம் ஒன்றை முன்வைக்க முடியும். ஆனால் கருத்தொன்றை முன்வைத்தால் முன்னர் கூறியதைப்போல் ஒரு தரப்பிற்கு, சாதகமாகவோ, பாதகமாகவோ அமையக்கூடும். தனிப்பட்ட ரீதியாக எனக்கு கருத்தொன்றைத் தெரிவிக்க முடியும்.
ஆனால், தேர்தல் ஆணைக்குழுத் தலைவராக கருத்தொன்றை முன்வைக்க முடியாது. கேள்விகளை முன்வைப்போர், அவர்களது கோணத்தில் இந்த விடயத்தைப் பார்க்கின்றனர். தனது கருத்தில் இவரும் இருக்கிறாரா என்று பார்க்கின்றனர். ஆனால் எல்லா விவகாரங்களிலும் எனக்கும் தனிப்பட்ட நிலைப்பாடு இருக்கிறது. ஆனால், மகிந்த தேசப்பிரிய என்ற சிவில் மனிதனுக்கு, அவரது தனிப்பட்ட சிவில் நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளத்தில் இரு நிலைப்பாடு இருக்கிறது. இரண்டு தரப்பினரும் உங்களை விமர்சிக்கின்றனர். அதனால் நீங்கள் நடுநிலையாகத்தான் செயற்படுகின்றீர்கள் என்பது புலனாகியது என்பதை உணர்கிறேன்.
தேர்தல் ஒன்றில் ஒரு தரப்பு (ஒரு கட்சி) மட்டுமே ஜெயிக்கிறது. இதன்போது மற்றைய தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டுமாயின் நான் ஐஸ்கிரீம்தான் விற்க வேண்டும். அதிலும் சிக்கல் இருக்கிறது. சீனியற்ற ஐஸ்கிரீமும் விற்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அனைவரையும் என்னால் திருப்திப்படுத்த முடியாது. எனது மனசாட்சிக்கு விரோதமின்றி நியாயமாக பணியாற்றுகிறேன். ஆரம்பம் முதலே, இந்தப் பதவிக்கு வரமுன்பு இருந்தே நான் யாருக்கும் பக்கசார்பாக செயற்பட்டதில்லை.
வெளிநாட்டில் உள்ளவர்கள் வாக்களிக்கும் முறையொன்றை ஏற்படுத்த முடியாதா என்று ஒருவர் கேட்கிறார்.
''இது கவலையளிக்கும் ஒரு விவகாரம். இது மிகவும் சிரமமான பணி. இதுகுறித்து நாடாளுமன்றக் குழுவொன்று ஆராய்ந்து வந்தது. காலப்போக்கில் அந்த குழு கலைக்கப்பட்டது. இலங்கையில் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம், நீதித்துறை அதிகாரம், நிறைவேற்று அதிகாரம் இந்த மூன்றும் மக்களுக்கே இருக்கிறது. ஆனால் இலங்கையில் பிரச்சினை என்னவெனில், அரசியலமைப்பின் மூலம், சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கும், நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கும், நீதித்துறை அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் ஒரு அதிகாரமாவது தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருந்திருந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிவோம். எமக்கு மேலே இந்த அதிகாரங்கள் இருப்பதால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணைக்குழுவினால் ஒன்றும் செய்யமுடியாது.
இலங்கையில் வழக்குகளில் தாமதங்கள் உள்ளதாக கருத்தொன்றுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரத் தாமதமானால் என்ன நடக்கும் என ஒருவர் கேட்கிறார்.
''இந்த விவகாரம் இழுபறிக்குச் செல்லாது. அதிவிசேட விவகாரம் என்பதால் ஒருவார காலத்திற்குள் தீர்ப்பொன்று வந்துவிடும். வேட்புமனுத் தாக்கல் திகதிக்கு முன்னர் தீர்ப்பொன்று வெளிவரும் என நான் நம்புகிறேன்.
அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தும் சந்தர்ப்பங்களை கடந்த காலங்களில் நாம் பார்த்திருந்தோம். இறுதிநேர அமைச்சுப் பதவிகளை வழங்கியதுகூட இவற்றுக்கு வழிவகுக்கும் என ஒரு தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவதைத் தடுக்க தேர்தல் ஆணைக்குழு என்ன நடவடிக்கை எடுக்கும்?
அரச சொத்தை துஸ்பிரயோகம் செய்தலை தடுத்தல் உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்படும். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள் ஆகியோருக்கான அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். அவர்கள் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்யாதிருக்க தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவுகளை பின்பற்றவேண்டும்.
இலங்கை அரசியல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதை அதிகாரிகளே தடுக்க வேண்டும். காரணம், அமைச்சுக்களின் செயலாளர்களிடமே இந்த அதிகாரங்கள் இருக்கின்றன. இவற்றைத் தடுப்பதற்கு சிவில் பிரஜைகள், ஊடகங்கள் அழுத்தம் கொடுக்கவும், இது தமது பணியென நினைத்தும் செயற்பட வேண்டும்.
அரச சொத்து துஸ்பிரயோகம் குறித்து முறையிட முடியும் என நினைக்கிறேன்.
இன்றும் முறையிடலாம். அதற்கான பணிகளை தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் முன்னெடுத்துச் செல்வார்கள். இணையத்தின் ஊடாகவும் முறைப்பாடுகளை ஏற்போம். இன்னும் ஓரிரு தினங்களில் இந்தப் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.''
தேர்தல் செலவு எவ்வளவாக இருக்கும்?
சுமார் 400 - 500 கோடி ரூபா செலவாகும். இது பொதுமக்களின் பணம். எனது அத்தைக்கு 94 வயது. அவர் தொலைபேசி அழைப்பொன்றை எடுக்கும்போது அதற்கும் அவர் வரி செலுத்துகிறார். இவ்வாறு பொதுமக்கள் அனைவரின் வரிப் பணத்தில் இருந்துதான் இந்த செலவு செய்யப்படுகிறது. இதனால் இந்த செலவைக் குறைக்கவே முயற்சிக்கிறோம். ஆனால் 500 கோடி ரூபா கேட்டிருக்கிறோம்.
கடந்த கால அரசியல் கலாசாரத்தைப் பார்க்கும்போது எமக்கு வாக்களிக்க விருப்பமில்லை, நாம் எமது வாக்குகளை விற்க முடியுமா என்று பல்வேறு கருத்துக்களை பலரும் முன்வைக்கின்றனர். ஏன் இவ்வாறான மனநிலை இருக்கிறது?
''இதுகுறித்து ஏராளமான முறைப்பாடுகளும், கோரிக்கைகளும் வருகின்றன. 1998 ஆண்டு காலப்பகுதி தேர்தலில் வாக்குச் சாவடியொன்றில் ஒரு தரப்பு குழப்பம் விளைவித்ததால் விரக்தியடைந்து, வாக்காளர் இடாப்பில் இருந்து தனது பெயரை நீக்குமாறு ஒருவர் பதிவிட்டிருந்தார். அதுபோன்ற கோரிக்கைகள் தற்போதும் வருகின்றன. எனினும், அதனைச் செய்வதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை. வாக்களிக்க வேண்டாம் என நான் யாருக்கும் கூற முடியாது. 'வாருங்கள், வாக்களியுங்கள்' என்றே நாம் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம்.''
இறுதியாக, வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்ன கூற விரும்புகிறீர்கள்?
பொதுமக்களுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை அடுத்து ஒரேயொரு இடத்தில் மட்டும் இரத்தம் சிந்தப்பட்டது. வேறொரு தெற்காசிய நாடொன்றில் இந்த நிலை ஏற்பட்டிருந்தால், ஏராளமான கைதுகள், இரத்தம் சிந்திய சம்பவங்கள் பதிவாகியிருக்கும். அரசியல் நெருக்கடிகளுக்காக குழப்பங்களையும், வன்முறைகளையும் ஏற்படுத்தாதிருந்த பொதுமக்களுக்கு நாம் நன்றிகூற விரும்புகிறோம்.
முன்பொருகாலத்தில் வாக்களிப்பு நிலையங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. மிகச் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும் என்றே கூறுகிறேன். கருத்து சுதந்திரத்திற்கு இடமளிக்குமாறு கேட்கிறேன். கருத்து தெரிவிக்கும் உரிமையை மற்றவருக்கும் வழங்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.