'இந்த அரசாங்கம் மன்னார் மக்களுக்கு ஓர் அங்குல நிலத்தை வழங்கவில்லை“



இந்த அரசாங்கம் மன்னாரிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஒரு அங்குல நிலத்தையேனும் வழங்கியதில்லையென அமைச்சர் ரிசாத் பத்தியுத்தீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
தான் வில்பத்து வனப் பகுதி இடங்களை சட்ட முரணாக தனது மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக நிரூபிக்க முடியுமாயின் தனக்கு வேண்டிய எந்தவொரு தண்டனையையும் வழங்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கூகுல் வரை படத்தை வைத்து கடந்த 2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் மன்னார் மக்களின் சொந்த இடங்களையும் வில்பத்து வனப் பகுதியாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்தே அவ்வரசாங்க காலத்தில் மன்னார் மக்களின் சொத்த இடங்களில் அவர்களில் சிலர் குடியேற்றப்பட்டனர்.
இதனையே சில சகோதர சிங்கள ஊடகங்கள் திரிபுபடுத்தல்களுடன் வில்பத்தை தான் ஆக்கிரமித்துள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.