இந்தியா நியூசிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால்?


இந்தியா நியூசிலாந்து இடையேயான அரை இறுதிப் போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது தொடங்கும்?

பிரிட்டன் நேரப்படி காலை 10.30 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கு போட்டி துவங்கும்.

எந்த ஓவர், எந்த பந்தில் இருந்து ஆட்டம் துவங்கும்?

நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்று 47-வது ஓவரின் இரண்டாவது பந்தை புவனேஷ்வர் குமார் வீசுவார். நியூசிலாந்து எஞ்சிய 23 பந்துகளையும் சந்தித்து 50 ஓவர்களையும் நிறைவு செய்யும்.
அதன் பின்னர் இந்திய அணி சேசிங் செய்யும்.

புதன்கிழமை மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா?

பிபிசி வெதர் பக்கம் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறுகிறது.

டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் கணக்கீடு நாளை(புதன்கிழமை) கடைபிடிக்கப்படுமா?

மழையால் ஆட்டம் பாதிக்கப்படவில்லை எனில் டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறைக்கு வேலையில்லை.
ஆனால் இன்று (புதன்கிழமை) மழை பெய்யும் பட்சத்தில் எந்தவொரு கட்டத்திலும் டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை கணக்கீடு முக்கிய பங்கு வகிக்கும்.
இன்றும் மழை பெய்து நியூசிலாந்து ஆட்டத்தை துவக்க முடியவில்லை எனில் இந்தியா 20 ஓவர்கள் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 148 ரன்கள் எடுக்க வேண்டியதிருக்கும்.
இன்றும் (புதன்கிழமை) ஆட்டம் கைவிடப்பட்டால்?
நாளை (புதன்கிழமை) இந்திய அணி 20 ஓவர்கள் பேட்டிங் செய்ய இயலாமல் போனால் ஆட்டம் கைவிடப்படும்.
அப்படி ஒரு சூழல் உருவானால் ரவுண்ட் ராபின் சுற்றில் நியூசிலாந்தை விட இந்தியா அதிக புள்ளிகள் எடுத்திருப்பதால் நேரடியாக இறுதி போட்டிக்குத் தகுதி பெறும்.
இன்றைய போட்டியில் (புதன்கிழமை) புது வீரர்கள் களமிறங்க முடியுமா?
இல்லை. நேற்றைய போட்டியில் இரு அணியிலும் களமிறங்கிய வீரர்களே இன்றும் விளையாட வேண்டும். பேட்டிங் அல்லது பௌலிங்கில் மாற்று வீரர் பங்கெடுக்க முடியாது.

நுழைவுச் சீட்டு வாங்கிய ரசிகர்கள் என்ன செய்வது?

நேற்று ரசிகர்கள் மைதானத்தில் போட்டியை காண நுழைவுச் சீட்டு வாங்கியிருந்தால் அதனை இன்றும் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த நுழைவுச் சீட்டை இன்று விளையாட்டரங்கில் நுழைவதற்கு முன் பரிசோதகரிடம் காண்பிக்க வேண்டியதிருக்கும்.
ரசிகர்கள் நுழைவுச் சீட்டை விற்க முடியாது.

இதுவரை ஆட்டத்தில் என்ன நடந்தது?

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
முதல் பந்திலேயே ரிவ்யூவை இழந்தது இந்தியா. முதல் இரண்டு ஓவர்கள் மெய்டன் ஆனது. மூன்றாவது ஓவரில் ரன் கணக்கைத் துவக்கியது நியூசிலாந்து.
நான்காவது ஓவரில் கப்டில் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா.
அதன்பின்னர் ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் இணைந்து பொறுமையாக விளையாடினர்.
ஜடேஜா பந்தில் நிக்கோல்ஸ் வீழ்ந்தார்.
கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் அணி மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை உயர்த்தவில்லை.
கேன் வில்லியம்சன் அரை சதமடித்து 67 ரன்களில் அவுட் ஆனார்.
நீஷம், கிராந்தோம் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.
ராஸ் டெய்லர் 67 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்திய அணி தரப்பில் ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டும் கொடுத்தார். சாஹலின் 10 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தனர் நியூசிலாந்து பேட்ஸ்மென்கள்.