முதற்தொகுதி கொடுப்பனவு


பாறுக் ஷிஹான்

 கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்று  22 நாட்களின் பின்னர்  கரை திரும்பிய  மீனவர்களின் குடும்பத்திற்கு முதற்தொகுதி கொடுப்பனவு ஒன்றினை தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்   சப்ராஸ் மன்சூர் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைத்துள்ளார்.


சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மீனவ குடும்பங்களின் வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை(13) மதியம் சென்று குறித்த உதவி தொகையினை வழங்கியதுடன் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு மீனவர்களின் நலனை விசாரிப்பதற்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சென்று அவர்களை சந்தித்ததுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மீனவர்களின் நலன் தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் றஹ்மானிடம் கேட்டறிந்து கொண்டார்.

கடந்த   2019.09.25 திகதி நடைபெற்ற  கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில்  உரையாற்றிய அவர் குறித்த மீனவ குடும்பங்களின் நலன்கருதி  நஷ்ட ஈடு ஒன்றினை சபையின் ஊடாக  வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உரையாற்றி இருந்ததுடன்  பிரதேச மக்களின் பசி தீர்க்க தன் உயிர் கொடுத்து உழைக்கும் எமது பிரதேச மீனவர்கள் மதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இரண்டு மீனவர்கள் குடும்பத்திற்கும் நன்கொடையாக நிதியுதவியை இந்த மாநகர சபை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.இதன் போது சபையில் உள்ள அனைத்து   உறுப்பினர்களும்  சேர்த்து அக்குடும்பம்களுக்கு உதவி  வழங்க வேண்டும்  விடுத்த வேண்டுகோளை சபை முதல்வர்ஏற்று  அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்.

எனினும் கடந்த 18.09.2019ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச்  சென்று 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்களான சாய்ந்தமருதை சேர்ந்த  சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) ஆகியோரது குடும்பங்களுக்கான உதவிகளை வழங்குவதாக ஏற்றுக்கொண்ட போதிலும் கல்முனை மாநகர சபை  அதை உரியநேரத்திற்கு கொடுப்பனவை  வழங்க  கால தாமதம் ஏற்பட்டது.இதனை  அடுத்து மாநகர சபை உறுப்பினர்    குறித்த மீனவ குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி குறிப்பிட்ட உதவி தொகை ஒன்றினை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்  கடந்த 18.09.2019ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச்  சென்று 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்கள்  திருகோணமலை பொலிஸ் நிலையம் ஊடாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த வியாழக்கிழமை(10) இரவு  அழைத்து வரப்பட்டு    ஒப்படைக்கப்பட்ட பின்னர்  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தங்களது வாய்முறைப்பாடினை பதிவு செய்த பின்னர் தத்தமது வீட்டிற்கு சென்றடைந்த பின்னர் திடிரென ஏற்பட்ட உடல் நலகுறைவு காரணமாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில்  கரை திரும்பிய மீனவர்களுடன் சென்ற  சக  மீனவரான காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47)  என்பரின் குடும்பத்திற்கு காரைதீவு பிரதேச சபை முதற்கட்டமாக ஒரு கொடுப்பனவை வழங்கியுள்ளதுடன் மற்றுமொரு கொடுப்பனவையும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.இது தவிர காரைதீவு வாழ் சமூகமும் மரணமடைந்த மீனவரின் குடும்ப நிலையை கருத்திற் கொண்டு நிதி சேகரிப்பு முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.