விசேட தேவையுள்ளோருக்கு போக்குவரத்து வசதி


ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல முடியாத உடல் பலவீனமானவர்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டிய கால எல்லை எதிர்வரும் சனிக்கிழமையுடன் (9) நிறைவு பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை மருத்துவ சான்றிதழுடன், தமது கிராம உத்தியோகத்தரிடம் அல்லது தெரிவத்தாட்சி உத்தியோகத்தரிடம் கையளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகளும், ஆதரவாளர்களும் தபால்மூல வாக்களிப்பின் பின்னர் குறிப்பிட்ட வேட்பாளர் அமோக வெற்றியை ஈட்டியிருப்பதாகவோ அல்லது பாரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதாகவோ, வெளியிட்டுவரும் கருத்துக்களில் எதுவித உண்மையும் இல்லை என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பிரசாரம் செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தபால்மூல வாக்குகள் நவம்பர் 16 ஆம் திகதி 5.00 மணியின் பின்னரே எண்ணப்படும். இந்த தபால் மூல வாக்குகளை எண்ணி, பெறுபேறுகளை வெளியிடும் வரை எவரும் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க முடியாதெனவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.