முல்லைத்தீவில்,குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக மாவட்டத்திலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிக் காணப்படுகின்றன.
இந்நிலையில் துணுக்காய் பிரதேச செயலகத்தில் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான் – மருதங்குளம் உடைப்பெடுக்கும் அபாயத்திலுள்ளது.
குறித்த மருதங்குளமானது சுமார் 9.5 அடி நீரை தேக்கிவைத்திருக்கக்கூடிய குளமாகும். அண்மைய நாட்களாக பெய்துவரும் கன மழை காரணமாக இக்குளத்தில் நீர் நிரம்பிக்காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எனவே குளத்தின் வால்கட்டுப் பகுதியால், சுமார் இரண்டு அடியளவில் நீரை வெளியேற்றுவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு நீரை வெளியேற்றி, குளத்தில் நீரை குறைப்பதன் மூலம் நீர்க்கசிவை தடுக்க முடியுமென வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் தெரிவித்தார்.