#CAB ;டெல்லியில் 3 பேருந்துகள் தீவைத்து எரிப்பு


இந்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஏற்பட்ட வன்முறையில், குறைந்தது மூன்று பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும், சில கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லியின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அங்குள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பங்கெடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்தேறிய, தெற்கு டெல்லியில் உள்ள நியூ பிரெண்ட்ஸ் காலனியை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: டெல்லியில் 3 பேருந்துகள் தீவைத்து எரிப்புபடத்தின் காப்புரிமைANI
இதேபோன்று, டேராடூன், அசாம், மேற்குவங்காளம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அதிர் ரஞ்சன் சௌத்திரி, நாட்டின் புதிய காஷ்மீராக அசாம் உருவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
"ஒட்டுமொத்த வடகிழக்கு இந்தியாவும், குறிப்பாக அசாம் முழுவதும் வன்முறை களமாக மாறியுள்ளது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதல்ல. ஒருபுறம், காஷ்மீரும் மற்றொருபுறம் புதிய காஷ்மீரான அசாமிலும் நிலவி வரும் சூழ்நிலை மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது" என்று அவர் கூறியுள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து மேற்குவங்கத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.
ஜிதேந்திர சிங்படத்தின் காப்புரிமைANI
Image captionஜிதேந்திர சிங்
இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தங்களது மாநிலத்தில் அமல்படுத்தப்போவதில்லை கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் அறிவித்துள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசு சார்ந்த இந்த முடிவில் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு மாநில அரசாங்கங்களுக்கு சிறப்பு உரிமை இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று கூறினார்.
"குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களின் தீவிரம் ஓப்பீட்டளவில் குறைந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையை, தங்களது அரசியல் ஆதாயத்துக்காக சிலர் பயன்படுத்த முயல்கிறார்கள்; அதில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய இடம் உண்டு" என்று அவர் மேலும் கூறினார்.