புத்தாண்டுச் சிந்தனைகள்


ஷ்ரீன் அப்துல் சரூர்
2019ஆம் ஆண்டு எம்மை விட்டுக் கடந்து செல்லக் காத்திருக்கும் இத்தருணத்தில் நம்மைச் சூழவுள்ள ஜனநாயகத் தளமும் வேகமாகச் சுருங்கிக்கொண்டு வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஆண்டையும் புதிய ஆண்டில் எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான மனித உரிமைகளுக்கெதிரான சவால்களையும் பற்றி மீண்டும் ஆழமாகச் சிந்திக்க விரும்புகின்றேன்.
அரசியலமைப்புக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பின்னர் குறிப்பிடத்தக்கவாறு நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை. மேற்குறிப்பிட்ட அநீதிக்கெதிராக மக்கள் ஒன்று திரண்டு ஆர்பாட்டங்களை நடத்தியமைக்கான காரணத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ஒன்றிணைந்து பிரதமரை மீளப் பதவியில் அமர்த்தியமைக்கான காரணத்தையும் பிரதமர் தாமே மறந்து விட்டார். இதனிடையே, கையாலாகாத ஜனாதிபதி சிறிசேன இந்தப் பதவிப் பந்தயங்களில் ஓடி எதையும் நாட்டுக்காச் சாதிக்க முடியாத நொண்டிக் குதிரையாக மாறிப்போனார் என்பதுதான் உண்மை. சர்வதேச புலனாய்வுத்துறைகள், உள்ளூர்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரது (முக்கியமாகக் காத்தான்குடிப் பிரதேச மக்களினது) முன்னெச்சரிக்கைகளை கருத்தில் கொள்ளாது புறக்கணித்ததன் காரணத்தினால் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத்தினர், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களென 260க்கு மேற்பட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு அன்று கொலை செய்யப்பட்டார்கள். திரு. சிறிசேன மற்றும் திரு. விக்கிரமசிங்க ஆகியோரின் வெட்கக்கேடானதும் மன்னிக்க முடியாததுமான தயக்கம் மற்றும் தாமதத்தின் நேரடி விளைவாக நமது நாடு ஓர் படுகுழியில் தள்ளப்படும் நிலை தற்பொழுது உருவாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் அனைத்தும் மாறிப்போன நிலையிலேயே இலங்கை காணப்பட்டது. நொடிப்பொழுதில், அனைத்து முஸ்லிம் சமூகத்தினரும் பயங்கரவாதிகளென முத்திரை குத்தப்பட்டதோடு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முஸ்லிம் இனத்தவர் ஒவ்வொருவரும் பொறுபேற்க வேண்டுமென்ற நிலையும் ஏற்பட்டது. இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் அல்லது முஸ்லிம் பெயரைக் கொண்டிருக்கும் ஒரே காரணத்தினால் பலர் சோதனைகளையும் அவமானத்தினையும் தன்னிச்சையான கைதுகளையும் தடுப்புக்காவலையும் சந்திக்க நேர்ந்ததை நாங்கள் அவதானித்தோம். பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இனவெறி கொண்ட கும்பல்கள் முஸ்லிம் கிராமங்கள், வீடுகள், அவர்களது வாழ்வாதாரங்கள் மற்றும் பள்ளிவாயல்களைச் சூறையாடி எரித்தழித்தனர். செல்ல இடமில்லாது மக்கள் அகதிகளாகத் தங்களுடைய இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வதந்திகள் முஸ்லிம் மருத்துவர்களையும் தொழில்சார் நிபுணர்களையும் குறிவைத்தன.  அவ்வாறு இலக்கு வைக்கப்பட்ட ஒரு முஸ்லிம் மருத்துவர், சிங்களப் பெண்களுக்குத் தன்னிசையாகக் கருத்தடைச் சத்திர சிகிச்சை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அம்மருத்துவர் கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்த அவரைக் கைது செய்தவர்கள், அவருக்கெதிரான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த இன்னமும் முயற்சி செய்து வருகின்றனர். பெருமளவிலான முஸ்லிம் அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் கட்டாய இராஜினாமாவை, வன்முறை மிக்க பௌத்த மத பிக்குகள் குழுவொன்று உறுதி செய்தது.
எப்போதும் போலவே முஸ்லிம் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். நிகாப் அணியும் பெண்களுக்கு பொது இடங்களில் நடமாடும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. அவசரகால சட்டத்தின் கீழ் இது தடை செய்யப்பட்ட காரணத்தினாலும் மேலும் ஜே.ஜே. ரத்ணசிறி (நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் தற்போதைய செயலாளர்) ஒரு அரச சுற்று நிருபத்தில் கையெழுத்திட்ட காரணத்தினாலும் இப்பெண்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வந்தனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான எஸ்.எல்.என்.டி.ஜேயுடன் (இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாஅத்) தொடர்புகளை வைத்திருப்பதாகக் கூறி தடுத்துவைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மிகவும் மோசமானதும் அழுக்கானதுமான நிலைகளில் வைக்கப்பட்டுள்ளனர். சமூகத்தில் இருந்து இவர்கள் விலக்கிவைக்கப்பட்டுக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவது, குறிப்பாகப் பெண்கள் மற்றும் பிள்ளைகளை அபாயநேர்வுக்கு உள்ளாக்கியுள்ளது.
ஜனாதிபதிக்கு உள்ள பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தினை சிறிசேன கேவலப்படுத்தியுள்ள காரணத்தினால் மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த பெண்கள் அமைப்புகள் கடுமையான குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கான சாத்தியத்திற்குச் சவால் விடுத்துள்ளனர். நீதிமன்றத்தினை அவமதித்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஞானசார தேரரிற்கு மன்னிப்பு வழங்கியமை அதிகாரத் துஷ்பிரயோகம் மட்டுமன்றி நீதித்துறைக்கு இழுக்கினையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் கோட்டபாய ராஜபக்‌ஷவின் வெற்றிக்கு வழிவகுத்தன. அன்று முதல் சிவில் சமூகக் குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் கண்காணிப்பானது மறைமுகமாக மேற்காள்ளப்பட்டது. ஆனால், தற்பொழுது கண்காணிப்பு அனைவருக்கும் புலப்படும் வகையில் மிகவும் அப்பட்டமாக அச்சுறுத்தும் வகையில் இடம்பெறுகின்றது. அரச சார்பற்ற நிறுவனங்கள் தேவையான அனைத்துத் தகவல்களையும் அரசுக்குச் சமர்ப்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் கோரப்பட்ட, இந்நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், நிறுவனங்களிற்கு நிதியுதவி வழங்குவோர், அவற்றின் ஊழியர்கள் போன்ற தகவல்கள் மட்டுமன்றி தற்பொழுது இந்நிறுவனங்களுக்கு சமூக மட்டத்தில் பணிப்புரியும் ஆர்வலர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தகவல்களும் கோரப்படுகின்றன. செய்தி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் எந்தவொரு மாற்றுக் கருத்தினையும் பிரசுரிக்காமல் இயங்குகின்றனவா என்பது கவனமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் சிவில் சமூகமும் ஊடகவியலாளர்களும் தங்களது செய்திகளுக்கும் மற்றும் நடவடிக்கைகளுக்கும் சுயதணிக்கையை மேற்கொள்கின்றனர். நல்லிணக்கம், உளநல ஆலோசனை, நினைவுகூறல் மற்றும் சமத்துவமற்ற சட்டங்களைத் திருத்துமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தல், பாரபட்சமான நடைமுறைகள் தொடர்பில் பரிந்துரை செய்தல் போன்ற திட்டங்களில் ஈடுபட்டிருந்த பெண் ஆர்வலர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். அரசால் உருவாக்கப்பட்ட காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தினை அணுகுவதற்காகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்வோர் இதற்கு மேலாக வெளிப்படையான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். பாரிய அளவில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாண்ட சில துணிவான பெண் சட்டத்தரணிகள் தற்பொழுது தங்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அஞ்சுகின்றனர். சில காணாமல் போனவர்களுக்கான அலுவலக ஆணையாளர்கள் தங்களது பதவிகளை விட்டு வெளியேறுவதா அல்லது வெளியேற்றப்படும் வரை பதவியில் இருப்பதா என்ற குழப்பத்தில் உள்ளனர். இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், அவரின் துணிச்சல் மற்றும் மீண்டெழும் பண்புகளைத் தாண்டி தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார். இவர் துணிந்து தனக்கு நேர்ந்த அநீதிக்குக் காரணமானவர்களை அடையாளப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மேன்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
சுவிஸ் தூதரகத்தில் பெண் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு அவரது விருப்பத்திற்கு மாறாகத் தடுத்துவைக்கப்பட்டுப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். அவரிடம் இருந்து அரசு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர் ‘அரசியல் அமைதியின்மையினை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் சிறையில் அடைக்கப்பட்டார். ‘தேசத்துரோகம்’ எனப் பலர் கதறினர். சிலர் மாத்திரமே துணிவாக இது தொடர்பில் குரல் எழுப்பினர். அவரது கதையானது சோகமானதும் இருண்டதுமான ஒரு செய்தியைக் கூறுகின்றது: நீங்கள் கடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டால் வெளியே கூறாது அமைதியைப் பேணுங்கள். நீங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பேசினால், நீங்கள் ஒரு பொய்யர், வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து சதித் திட்டங்களை மேற்கொள்ளும் ஒரு துரோகி. ‘ஓர் தேசப்பற்றுள்ளவராக நாட்டின் அபிவிருத்திக்கு ஆதரவளியுங்கள். நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் கதைக்க வேண்டாம். கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும்.’ இது பிழைத்து வாழ்வதற்கான ஒரு மந்திரமாக மாறியுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் வன்முறைமிக்க பௌத்த குருக்களும் முன்னாள் இராணுவத்தினரும் எம்மைத் திருத்த முயற்சிப்பார்கள். பிரார்த்தனையில் ஈடுப்படும் கிறிஸ்தவ போதகர்களை மிரட்டி அவமானப்படுத்தும் பௌத்த பிக்கு ஒருவரின் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இதுவே நமது புதிய யதார்த்தம்.
நாட்டு நிலைமைகள் மோசமடைந்து வரும் இத்தருணத்தில், சர்வதேச சமூகம் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளிலிருந்து சற்று ஓய்வெடுத்து மீள்மதிப்பீடு செய்வது வருத்தத்திற்குரிய விடயமாகும். சுவிஸ் தூதரக ஊழியரின் சார்பில் வழக்கு தொடரப்பட்டாலும், ஜனநாயகத்தில் ஒரு நாட்டின் பாதையை வாக்காளர்களே தீர்மானிக்கின்றனர் என வெளிநாட்டு இராஜதந்திரிகள் கூறுவதைக் கேட்கிறோம். ஆசியாவில் இஸ்லாமிய இனத்தின் மீதான வெறுப்பு மற்றும் பயத்திற்கு முகங்கொடுக்கும் ஒரே நாடு இலங்கை மாத்திரம் அல்ல. மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம் சமூகத்தினரை நாடற்றவர்களாக மாற்றியமை தொடங்கி இந்தியாவிலும் இந்துத்துவக் குழுக்களின் முயற்சியினால் முஸ்லிம் மக்களுக்கெதிரான செயற்பாடுகள் பரவியுள்ளன. இங்கு, அங்கு போலவே பெரும்பான்மை அரசியல் சிறுபான்மை உரிமைகளை மிதிக்கின்றது.
எனவே, இங்கிருந்து எங்கே நகர்வது?
முஸ்லிம் மனித உரிமைகள் தொடர்பில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை ரத்துச் செய்து ஒழிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்  அத்துரலிய ரதன தேரர் தனிநபர் பிரேரணையினை (ஏற்கனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது) முன்வைக்கவுள்ளார். இது, முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை மதிப்பதற்காக பழமையான முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளப் பல வருடங்களாகப் போராடிய முற்போக்கான முஸ்லிம் இனத்தவர்களின் கைகளைக் கட்டிவிடும். திரு. விக்கிரமசிங்க, எமது முதலாவது பெண் நீதியமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இனவாதமும் பின்தங்கிய சிந்தனைகளும் கொண்ட முஸ்லிம் ஆண்களும் இணைந்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் கூட்டுச் சேர்ந்து நீதிபதி சலீம் மர்சூப் குழுவினரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளைப் பிரித்தனர். தற்பொழுது அதுரலிய ரதன தேரரின் இனவெறிமிக்க பிரேரணையை முறியடிக்க, பெண்கள் கடுமையாக எதிர்த்த அந்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக  சீர்திருத்தத்திற்கு எதிரிகளான அகில இலங்கை ஜமீயதுல் உலமாவுடனும் பிற்போக்கான முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் நாமும் கைகோர்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நிலைமாறு கால நீதியைப் பொறுத்தமட்டில், கடந்த காலத்தைக்  கையாளுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் 2020இல் சுருட்டிவைக்கவேண்டிய சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்பொழுது நடைமுறையில் உள்ள நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளான காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் இடைநிறுத்தி வைக்கப்படும் நிலைக்கு வந்துள்ளன.  மேலும் மீதமுள்ள இரு பொறிமுறைகளான உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் விசேட நீதிமன்றம் ஆகியவை ஒருபோதுமே நிறைவேற்றப்பட மாட்டாது. ஏற்கனவே தற்போதைய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் இலங்கைக்குப் பொருத்தமற்றது எனப் பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் அவரது நிர்வாகம் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை சார் மனித உரிமை பேரவை அமர்வில் ஒரு தீர்மானத்தை முன்வைக்கும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. அதாவது முன்னைய தீர்மானத்திலுள்ள கடமைகளிலிருந்து வெளியேறுவதற்கான தீர்மானமாக இது இருக்கலாமெனச் சிலர் கருதுகின்றனர்.
நாட்டைப் பொறுத்தவரை, கடினமாக உழைத்து வென்றெடுத்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தினை இழக்க நேரிடும் அறிகுறிகள் காணப்படுகின்றன. கருணா, பிள்ளையான் மற்றும் ஏனைய தீவிர தமிழ் தேசியவாதிகள் எதிர்வரும் தேர்தலில் வெல்லுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்படலாம். இதே நிலை முஸ்லிம் போட்டியாளர்களுக்கும் ஏற்படலாம்; மிதவாதிகள் மக்கள் ஆதரவை இழக்கும் நிலை உருவாகும். ஏப்ரல் மாத நாடாளுமன்ற தேர்தலானது பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு முக்கியமானதாகும். ஒரு கட்சி 2/3 பெரும்பான்மையை வெல்லும் அதேவேளை சிறுபான்மைக் கட்சிகள் பலவீனமாகக் காணப்படும் பட்சத்தில், ராஜபக்‌ஷ சகோதரர்களின் கரங்களில் எற்கனவே குவிக்கப்பட்டுள்ள அதிகாரம் மேலும் பலப்படுத்தப்படும் நிலை ஏற்படலாம். வெகு விரைவில் அரசாங்க அலுவலகங்களை இயக்குவது முதல் பூங்காக்களைக் கூட்டிப் பெருக்குவது மற்றும் வடிகால்களைச் சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளை மேற்கொள்ள இராணுவம் மீண்டும் சிவில் நிர்வாகத்தினை எடுத்து நடத்தும் நிலை ஏற்படும்.
மனித நேயம் என்ற ஒளியே நமக்குள் காணப்படும் ஒரே நம்பிக்கையாகவுள்ளது. எம்மை சூழவுள்ள சுவர்கள் குறுகி கொண்டுவரும் வேளையிலும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களும் மனைவிமார்களும் தொடர்ந்து பின்வாங்காது துணிவுடன் நிற்கின்றனர். அவர்களது வழக்கமான மாத இறுதி ஆர்ப்பாட்ட நிகழ்வினை டிசம்பர் 30 ஆம் திகதியன்று நடத்தினர். தனது கணவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்து வந்த தலைமை புலனாய்வு அதிகாரி, நாட்டை விட்டு வெளியேறிய போதிலும், சந்தியா எக்னேலிகொட கணவர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்று வருகிறார். தற்பொழுது தனது கணவர் கடத்தப்பட்டமையை நிரூபிக்க வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்க பெரிதும் சாட்சிகளையே நம்பியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் சாதாரண மக்கள், அவர்களது குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் உயிர்களை அபாய நேர்வுக்கு உள்ளாக்குவது நியாயமற்ற செயலாகும். எனினும், விடாமுயற்சியுடன் உண்மைக்கும் நீதிக்கும் குரல் கொடுத்துப் போராடும் துணிச்சலான ஆத்மாக்களினால் இப்போராட்டம் தொடரும் என்ற நம்பிக்கை எனக்குள் வருகின்றது.