அமெரிக்கா - இரான் மோதலால் சௌதி அரேபியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

நீண்டகாலமாக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையில் இருந்து வந்த பதற்றம், கடந்த வாரம் மேலும் அதிகமானது. இரான் ராணுவ ஜெனரல் காசெம் சுலேமானீயை விமானத் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொலை செய்தது. இதற்குப் பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இருந்தாலும், அதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளதால், மத்திய கிழக்குப் பகுதி பெரிய நெருக்கடியின் விளிம்பில் சிக்கிக் கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையில் போர் ஏற்பட்டால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மற்ற பல நாடுகளிலும் குழப்பம் ஏற்படும். அது ஒட்டுமொத்த உலகின் மீதே தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜெனரல் சுலேமானீ மரணத்துக்கு பழி வாங்கியே தீருவோம் என்று அமெரிக்காவுக்கு இரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்திருப்பது சௌதி அரேபியாவுக்கும் கவலையை அதிகரிக்க செய்துள்ளது.
இரானை அமெரிக்கா தாக்கினாலோ அல்லது போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கினாலோ, அது சௌதி அரேபியாவை மிக மோசமாக பாதிக்கும். ஏனெனில் அமெரிக்காவுக்கு அக்கறையான கணிசமான விஷயங்கள் சௌதி அரேபியாவில் இருப்பதால், நிச்சயமாக சௌதி அரேபியாவை இரான் குறிவைக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
போர் போன்ற சூழ்நிலை உருவாகி வருகிறது என்று நிபுணர்கள் நம்பினாலும், இது போராக மாறுவதை எந்த நாடும் விரும்பவில்லை. ஏனெனில் மத்திய கிழக்கில் அழிவு ஏற்பட்டால், ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமே பாதிப்புக்கு உள்ளாகிவிடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

மத்திய கிழக்கில் இரானின் செல்வாக்கு

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருவதால், அந்தப் பிராந்தியம் முழுக்கவே பதற்றத்தில் சிக்கியுள்ளது என்று சௌதி அரேபியாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தல்மீஸ் அஹமது கூறுகிறார். தொடர்ந்து பதற்றம் அதிகரித்தால், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரகத்தில் உள்ள நிலைகளை குறிவைத்து இரான் தாக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிந்த விஷயம்தான். பிறகு அதற்குப் பதிலடி இருக்கும். அது மோதல் என்பதோடு நின்றுவிடாது. அந்தப் பிராந்தியம் முழுக்க அது பரவும். அந்தப் பிராந்தியத்தில் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்துவதாக அது இருக்கும்.
அமெரிக்கா - ஈரான் மோதலால் சௌதி அரேபியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
``அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புவதாக அமெரிக்க தலைவர்கள் கூறினாலும், அமெரிக்காவின் செயல்பாடுகள் எரிச்சலை ஊட்டியிருக்கின்றன. அவர்கள் ஒருபோதும் தூதரக வழிமுறைகளைப் பின்பற்றவில்லை. எப்போது பிரச்சினைகள் ஏற்பட்டாலும், நேரடியாக தாக்குதல் நடத்த அமெரிக்கா தன் ராணுவத்தைப் பயன்படுத்துகிறது. அது ஒட்டுமொத்த நாட்டையே சீர்குலைத்து விடுகிறது. இராக், ஆப்கானிஸ்தான், லிபியாவில் அவர்கள் இதைத்தான் செய்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய செயல்பாடுகள் ஸ்திரத்தன்மையைப் பாதிப்பதாக உள்ளன. இராக்கில் பல ஆண்டுகளாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கிறார்கள். லிபியாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு எல்லோருக்கும் நன்கு தெரிந்ததுதான்'' என்று தல்மீஸ் அஹமது கூறுகிறார்.
Presentational grey line

Presentational grey line
மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட அழிவுகளின் பின்னணியில் அமெரிக்கா மட்டுமே உள்ளது என்று அஹமது நம்புகிறார். 9/11 தாக்குதலில் இராக்கிற்கு எந்தப் பங்கும் கிடையாது. ஆனாலும் இராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அதனால் தான் ஜிகாத் வந்தது. கடைசியாக ஐ.எஸ். தீவிரவாதம் அங்கே உருவானது என்கிறார் அஹமத்.

இரான் தனிமைப்படுத்தப்படுமா?

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம், போருக்கான சூழ்நிலையை உருவாக்கினால், அது இரானை தனிமைப்படுத்துமா அல்லது மத்திய கிழக்கில் வேறு சில நாடுகள் அதற்கு ஆதரவாக வருமா?
இப்பிரச்சனையை பொறுத்தவரை, அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இரண்டு தரப்புகளாகப் பிரிந்திருப்பதாக, டெல் அவிவில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஹரிந்தர் மிஸ்ரா கூறுகிறார்.
சில நாடுகள் இரானுக்கு ஆதரவு தரும். மற்றவை அமெரிக்காவை ஆதரிக்கும். இரானை பொருத்த வரையில், இராக்கிடம் பெரிய செல்வாக்கைக் கொண்டிருக்கிறது.
ஏமனில் சில பகுதிகளில் இரானுக்கு சிறிது செல்வாக்கு உள்ளது. குறிப்பாக ஹூதி சமுதாயத்தினரிடம் இரானுக்கு செல்வாக்கு உள்ளது. சௌதி அரேபியாவை அது தாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. எனவே அங்கு அதிக செல்வாக்கு இருக்கும் என்று தெரிகிறது.
ஹெஸ்புல்லா அமைப்பு இருக்கும் தெற்கு லெபனானில் இரானுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இரான் மற்றும் ரஷ்யாவின் ஆதரவு காரணமாகத்தான் சிரியாவில் பஷார் அல் ஆசாத் அதிகாரத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறார்.
அது தவிர, காஜா ஹமாஸ் அமைப்பு இரானின் ஆதரவைத்தான் அதிகமாக நம்பியுள்ளது. துருக்கிக்கு இரானுடன் நல்ல உறவு இருந்து வருகிறது. ஆனால் போர் ஏற்பட்டால் அது இரானுடன் அணி சேராது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் துருக்கியின் உறவு இன்னும் இனிதாக உள்ளது. போர் ஏற்பட்டால், எந்தத் தரப்புடனும் துருக்கி சேராது என்றே தெரிகிறது.
அமெரிக்கா - ஈரான் மோதலால் சௌதி அரேபியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
எகிப்தில் பெருமளவு மக்கள் தங்கள் அரசுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். எகிப்துக்கு இரானுடன் நல்லுறவு உள்ளது. ஆனால் அங்குள்ள சுன்னி முஸ்லிம்கள், இரானுக்கு ஆதரவு அளிப்பதை விரும்ப மாட்டார்கள்.
வளைகுடா பகுதியில் உள்ள சௌதி அரேபியா, ஐக்கிய அமீரகம், ஓமன், குவைத் போன்ற நாடுகள் இரானை பார்த்து அஞ்சுகின்றன.
இரான் அணுசக்தி திட்டத்தில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று அந்த நாடுகள் விரும்புகின்றன. எனவே அவை அமெரிக்காவுடன் அணி சேரும். இந்த நாடுகளுக்கு இஸ்ரேலுடன் உறவு மேம்பட்டிருக்கிறது என்பது மற்றொரு முக்கியமான விஷயம். அவற்றுக்கிடையில் தூதரக உறவுகள் புதுப்பிக்கப்படவில்லை என்றாலும், உறவு மேம்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, தன் அமைச்சர்களுடன் ஓமனுக்கு பயணம் சென்றிருக்கிறார். உறவுகளை பலப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது. அந்தப் பிராந்தியமே இரண்டாகப் பிரிந்து நிற்கிறது. இருந்தாலும், அந்தப் பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

உண்மையிலேயே அந்தப் பிராந்தியம் போரை நோக்கி நகர்கிறதா?

``குவைத்தில் இராக் நுழைந்து மற்றும் அந்த நாட்டின் பெரும் பகுதியை சதாம் உசேன் ஆக்கிரமித்துக் கொண்டபோதுதான் இதற்கு முன்பான வளைகுடா போர் தொடங்கியது. . இரான் அப்படி செய்யுமா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் சௌதி அரேபியா மீதான தாக்குதல்களுக்கு இரான் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. சௌதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதற்கும் இரான் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவே, அதுபோன்ற வாய்ப்பை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது. ஆனால் அது இரானுக்கு கடினமான முடிவாக இருக்கும். ஏனெனில் பல நாடுகளுடன் பகைமையை உருவாக்கிக் கொள்வது அதன் பொருளாதாரத்தை மேலும் சீரழிப்பதாக இருக்கும்'' என்று ஹரிந்தர் மிஸ்ரா கூறுகிறார்.
``இரானுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடையால் நாட்டிற்குள் எதிர்ப்பு சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்போது அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையில் சிறிது பதற்றம் உள்ளது. ஆனால் இது அதிக காலம் நீடிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இரானின் வலுவிழந்த பொருளாதாரம் இதற்கு ஒரு காரணம். பெரிய அளவில் போர் தொடுக்கவோ அல்லது அதை நோக்கிச் செல்லும் நிலையிலோ இரான் இல்லை'' என்றும் ஹரிந்தர் மிஸ்ரா கூறுகிறார்.
அமெரிக்கா - ஈரான் மோதலால் சௌதி அரேபியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சிறிய சச்சரவுகளுக்குப் பிறகு, விஷயம் அமைதியாகிவிடும் என்று நம்பப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய கிழக்கில் உள்ள சௌதி அரேபியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இரானை எச்சரித்துள்ள போதிலும், இஸ்ரேலை இரான் தாக்கினால், பதிலடி தர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்தால், ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்படும் என்று ஹரிந்தர் மிஸ்ரா நம்புகிறார். பெருமளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்திய கிழக்கில் உள்ளன. போர் ஏற்பட்டால், ஒட்டுமொத்த உலகையும் அது பாதித்து, உலகப் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும் என்கிறார் அவர்.
``இந்தியாவைப் பொருத்த வரை, கச்சா எண்ணெய்க்கான கவலையை தாண்டி, பல லட்சம் இந்தியர்கள் அந்தப் பிராந்தியத்தில் வாழ்கின்றனர். போர் சூழல் உருவானால், அந்தப் பிராந்தியத்தில் இருந்து பல லட்சம் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்படும். அது மிகப் பெரிய சவாலாக இருக்கும். இந்த மக்கள் அங்கு வேலை பார்ப்பது மட்டுமின்றி, பல நூறு கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பி வருகின்றனர். அந்த இழப்பும் இந்தியாவுக்கு ஏற்படும்.
அமெரிக்கா - ஈரான் மோதலால் சௌதி அரேபியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
மேலும், இந்தியாவுக்கு மிகப் பெரிய சந்தையாக அந்தப் பிராந்தியம் உள்ளது. அங்கிருந்து இந்தியாவிக்கு செய்யப்படும் பெருமளவிலான ஏற்றுமதி நின்றுபோகும். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்திருக்கிறது. இரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடையால் இந்தியாவிற்கு ஏற்கனவே பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. இரானுக்கு எதிரான கச்சா எண்ணெய் தடை காரணமாக ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையை வேறு வழிகளில் சரி செய்வதற்கான திட்டங்களை உருவாக்க இந்தியா முயற்சி மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்தியாவும் நிறைய சவால்களை எதிர்கொண்டுள்ளது'' என்றும் ஹரிந்தர் மிஸ்ரா கூறுகிறார்.

உலக அளவில் அது எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும்?

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையின் பாதிப்பை எல்லோரும் உணர்வார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்த விஷயம்.
மத்திய கிழக்கில் இருப்பு கொண்டிருப்பதாலும், அது அமெரிக்காவுக்கு பெரிய சந்தையாக உள்ள பகுதி என்பதாலும், அமெரிக்காவுக்கு இதில் பெரிய அக்கறை இருக்கும்.
ஏறத்தாழ அனைத்து விஷயங்களுக்கும் சௌதி அரேபியா அமெரிக்காவை சார்ந்து உள்ளது. அதன் தொழில்நுட்பம் தவிர, மத்திய கிழக்கில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை சாதனங்களை விற்பனை செய்கிறது. இந்த நாடுகளில் அமைதி பாதிக்கப்பட்டால், அது அமெரிக்காவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நட்பு நாடுகளின் பொருளாதாரம் பலவீனமடைந்தால், அமெரிக்க சந்தையையும் அது பாதிக்கும்.
அமெரிக்கா - ஈரான் மோதலால் சௌதி அரேபியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
``ஐரோப்பாவில் எந்த நகரத்தையும் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் இரானிடம் உள்ளன. இஸ்ரேலில் டெல் அவிவ் நகரை இரானின் ஏவுகணைகள் தாக்க முடியும். அந்தப் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்த வல்லமையான ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இரான் அறிவித்திருக்கிறது. டெல் அவிவ் நகரை அவர்களால் தாக்க முடியும் என்றால், மத்திய கிழக்கில் எந்த இடத்தையும் அவர்களால் தாக்க முடியும். இரான் அதுபோன்ற தாக்குதல்களை நடத்தும் என்று நிபுணர்களும், இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் நம்புகின்றனர். அதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்கும் நோக்கில், மத்திய கிழக்கில் பல ராணுவ தளங்களை அமெரிக்கா அமைத்திருப்பதாக நம்பப்படுகிறது. அதுபோன்ற தாக்குதல் முயற்சிகளை அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு சாதனங்கள் முறியடிக்கும் என்று சொல்லப்படுகிறது'' என்று ஹரிந்தர் மிஸ்ரா கூறுகிறார்.
மத்திய கிழக்கில் இப்போது நிலவும் பதற்றத்துக்கு ஏதோ ஒரு வகையில் இஸ்ரேல் அதிக பொறுப்பேற்க வேண்டும் என்று தல்மீஸ் அஹமது நம்புகிறார். ``அந்தப் பிராந்தியத்தில் ஆதிக்க சக்தி நிலையில் இருந்து இரானை அகற்றிவிட வேண்டும் என்று இஸ்ரேலிய தரப்பினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில் அந்தப் பகுதியில் மற்ற அனைவரையும் விட வலிமையாக இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்'' என்று அஹமது கூறுகிறார்.
அமெரிக்கா - ஈரான் மோதலால் சௌதி அரேபியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
``இரானுடன் இணக்கமாக செயல்பட பல முறை அமெரிக்கா முயற்சி செய்துள்ளது. அந்த முயற்சிகளுக்கு இரானும் ஆதரவு அளித்துள்ளது. 2001 தாக்குதல்களுக்குப் பிறகு, தாலிபன்களை எதிர்கொண்டபோது அமெரிக்காவுக்கு இரான் புலனாய்வுத் தகவல்களை அளித்தது. இராக் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆயத்தமான போது, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையிலும் இரான் ஈடுபட்டது. ஏனெனில் இரு நாடுகளும் சதாம் உசேனுக்கு எதிரான நிலையைக் கொண்டிருந்தன. அந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க, அமெரிக்காவுடன் சுமுக உறவைப் பராமரிக்க இரான் முயற்சி செய்தது. ஆனால் அது இஸ்ரேலுக்குப் பிடிக்கவில்லை. சுமுக நிலை தொடர அனுமதிக்கவில்லை'' என்று தல்மீஸ் அஹமது தெரிவித்தார்.

இது சௌதி அரேபியாவுக்கு எந்த வகையில் தீவிர அச்சுறுத்தலாக இருக்கும்?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளும், அமெரிக்காவும் போருக்குத் தயாராக உள்ளனவா? இதன் விளைவுகள் எந்த அளவுக்கு அவர்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?
அமெரிக்கா - ஈரான் மோதலால் சௌதி அரேபியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
``முழு அளவிலான போர் நடக்கட்டும் என்று மேற்காசியாவில் எந்த நாடும் விரும்புவதாக நான் நினைக்கவில்லை. இரான், சௌதி அரேபியா, இஸ்ரேல் நாடுகள் அதுபோன்ற போரை விரும்பாது. ஆனால் நிலைமை கட்டுக்கு அடங்காமல் போகலாம். இரான் தனியாக அமெரிக்காவை எதிர்த்து போர் நடத்த முடியாது. ஆனால் அதுபோன்ற போர் நடக்காது. போராளிகளின் சண்டையாகதான் அது இருக்கும். ஹெஸ்புல்லா உள்ளிட்ட போராளி அமைப்புகளின் பலம் இரானுக்கு உள்ளது. தங்களிடம் 50 ஆயிரம் ராக்கெட் குண்டுகள் உள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பினர் கூறியுள்ளனர். போராளிகள் அமைப்பினர் தங்கள் வல்லமையைக் காட்டத் தொடங்கினால், அந்தப் பிராந்தியம் போர் சூழலில் சிக்கிக் கொள்ளும். அமெரிக்காவை எதிர்த்துப் போரிடும் திறன் இரானுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் சௌதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வயல்களை இரானால் நிச்சயமாக அழித்துவிட முடியும். அது ஒட்டுமொத்த உலகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் போரில் யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இருக்காது, அழிவு மட்டுமே இருக்கும்'' என்று தல்மிஸ் அஹமது கூறினார்.
அந்தப் பிராந்தியத்தில் போர் ஏற்பட்டால் சௌதி அரேபியா, அபுதாபி, ஐக்கிய அமீரகம் ஆகியவை பெரிய இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் அந்த நாடுகளை தாக்குவது இரானுக்கு எளியதாக இருக்கும்.
செப்டம்பர் மாதம் சௌதி அரேபியாவில் எண்ணெய் வயல்கள் மீது நடந்த தாக்குதல்கள் இதைத் தெளிவுபடுத்தியுள்ளன. அந்தத் தாக்குதல்களுக்கு இரான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்தத் தாக்குதல்களால் சௌதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
எனினும் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும். ஆனால் போர் நடப்பதை எந்த நாடும் விரும்பவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


Advertisement