இலங்கையில் ஒரே நாளில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று


இலங்கையில் கொரொனா தொற்று காரணமாக இதுவரை 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.
இன்றைய தினம் புதிதாக 20 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.
114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 173 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொழும்பு பங்கு சந்தை மூடப்படுகின்றது

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படும் வரை கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிணைமுறிகள் மற்றும் பங்கு பரிவர்த்தனை சபையின் தீர்மானத்திற்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கொவிட் 19 வைரஸ் பரவுவதை அடுத்து, அரசாங்கத்தினால் முன்னெடுத்துள்ள தீர்மானத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தின நிகழ்வுகள் ரத்து

இலங்கையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு, எதிர்வரும் ஈஸ்டர் தின ஆராதனைகளை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டனை இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக கததோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட் தந்தை லால் புஸ்பதேவ பெர்ணான்டோ பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
அதன்படி, நாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திங்கள், வியாழன், பெரிய வெள்ளி, அல்லேலூயா சனி மற்றும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இடம்பெறவிருந்த ஆராதனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கத்தோலிக்க திருச்சபையினால் நடத்தப்பட்ட அனைத்து ஆராதனைகளையும் இனி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
6 மாவட்டங்கள் தொடர்ந்து முடக்கம்
கோவிட் - 19 வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படும் அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துரை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை முடக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களை தவிர்த்த ஏனைய 19 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எந்தவிதத்திலும் மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டத்தை மீறிய 7000திற்கும் அதிகமானோர் கைது

கடந்த 20ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய 7619 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், குறித்த காலப் பகுதியில் மாத்திரம் 1864 வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப் பகுதியில் அனுமதியளிக்கப்பட்டவர்களை தவிர்த்த ஏனையோர் வீதிகளில் பயணிக்கும் பட்சத்தில், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

`ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்`

இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதை முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாயின், 80 வீதத்திற்கும் அதிகமான சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் அந்த சங்கம் அறிக்கையொன்றின் ஊடாக பரிந்துரை முன்வைத்துள்ளது.
அவ்வாறு இல்லையென்றால், இலங்கை பாரிய பிரச்சனைகளை சந்திப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அந்த சங்கம் எச்சரிக்கை விடுக்கின்றது.
பிற செய்திகள்: