இலங்கை ரூபாய் மதிப்பில் பெரும் வீழ்ச்சி


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் புதிதாக மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ள குறித்த நபருக்கு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததுடன், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்த நபரின் சடலத்தை அரசாங்கம் உறவினர்களிடம் கையளிக்காது, அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்திருந்தது.
இறுதிக் கிரியைகளுக்கு இரண்டு உறவினர்கள் மாத்திரம் அழைக்கப்பட்டிருந்ததுடன், பலத்த சுகாதார பாதுகாப்புக்கு மத்தியில் சடலம் தகனம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 104 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், 14 பேர் இதுவரை சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.
Banner

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நிலைமை

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒரு இலங்கையர் சுவிஸர்லாந்தில் கடந்த 25ஆம் தேதி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரே சுவிஸர்லாந்தில் உயிரிழந்தமையை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், இத்தாலியிலுள்ள இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர் சிகிச்சைகளின் பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்று முன்தினம் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ருவந்தி பெல்பிட்டியவை தொடர்புக் கொண்டு வினவியது.
பிரித்தானியாவின் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்தமையை அந்த நாட்டுக்கான தூதரகம் உறுதிப்படுத்தியதாக கூறிய அவர், மரணத்திற்கான காரணம் இதுவரை மருத்துவ அறிக்கைகளின் ஊடாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அந்த நாட்டு மருத்துவமனைகளினால் மருத்துவ அறிக்கைகள் கிடைத்ததன் பின்னரே உயிரிழப்பிற்கான காரணத்தை கூற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பதிவு

வெளிநாடுகளிலுள்ள 17,457 இலங்கையர்கள், இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்துள்ளார்கள் என வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவிக்கின்றது.
இதில் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள 6773 பேரும், ஐரோப்பாவிலுள்ள 1892 பேரும், தெற்காசிய நாடுகளிலுள்ள 1302 பேரும், வட அமெரிக்காவிலுள்ள 1028 பேரும், உலகிலுள்ள ஏனைய நாடுகளில் வாழும் 6000திற்கும் அதிகமான இலங்கையர்களும் தம்மிடம் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நிலவரத்தின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 192.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி பதிவாகியிருந்தார்.
அன்றைய தினம் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 181.44 ரூபாவாக காணப்பட்டது.
அதன்பின்னர் அடுத்த கொரோனா நோயாளர் மார்ச் மாதம் 11ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

அன்றைய தினமாகும் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 182.44 ரூபாயாக காணப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த 19 நாட்களில் மாத்திரம் சுமார் 10 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஊரடங்கை அமுல்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதி விசேட செயலணியிடம்

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அனைத்து தீர்மானங்களையும் ஜனாதிபதி விசேட செயலணியே மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கும் அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல் என்பவை அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தில் மாற்றம் செய்ய தேவையான தகவல்கள் இருப்பின் அந்த அனைத்து தகவல்களையும் கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட முடியாது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊரடங்கு தொடர்கின்றது

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அரசாங்கத்தினால் முடக்கப்பட்டுள்ளன.
வெறிச்சோடிய தெருக்கள்
இந்த மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், இடைக்கிடை ஊரடங்கு சட்டம் குறித்த மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பும் வரை இந்த நிலைமை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.