லிந்துலையில் 6 பேர் விடுவிப்பு – சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு(க.கிஷாந்தன்)

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலிருந்து வருகை தந்திருந்த சாரதிகள் மற்றும் உதவியாளர்களென மொத்தம் ஆறு பேர் 14 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களை 4 நாட்களுக்குள் விடுவிப்பதற்கு நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என லிந்துலை பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்து கடந்த 31 ஆம் திகதி லிந்துலை சுகாதார வைத்தியப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலைத் தொழிற்சாலையொன்றுக்கு சாரதிகள், அவர்களின் உதவியாளர்களென 12 பேர் கனரக வாகனங்களில் வந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களை சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு அக்கரப்பத்தனை பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்படி குறித்த 12 பேரில் அறுவர் பதுளை பகுதியைச் சேர்ந்தவர்களென்பதால் அவர்களை அவர்களில் வீடுகளுக்கு சென்று அப்பகுதியிலுள்ள சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் சுய தனிமை நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரை லிந்துலை பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலொன்றில் சுய தனிமைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

31 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு தனி தனிமையில் ஈடுபட்டு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறுவறுக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. எனினும், நான்கு நாட்கள் மாத்திரமே கடந்த நிலையில் அவர்கள் கண்காணிப்பில் இருந்து நேற்று (04) விடுவிக்கப்பட்டுள்ளன.

சுயதனிமை நடைமுறையை இவர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர் என நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும், நிறுவனத்துக்குரிய கனகர வாகனங்களும் (கண்டேனர்) விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்பின்னர் ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்குரிய அனுமதி பத்திரத்தை லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொண்டு அறுவரும் அப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

“கொரோனா வைரஸ் முழு உலகுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.  வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழ்நிலையில், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்க செயலாகும்.” – என்று பொது சுகாதார பரிசோதகர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சங்கத்தின் கருத்து.....

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம் வினவியபோது,

“ இது விடயத்தில் பிரதேசத்துக்குரிய சுகாதார பரிசோதகர்கள் தமது கடமையை உரிய வகையில் நிறைவேற்றியுள்ளனர். எனினும், உணவு பிரச்சினை இருப்பதாககூறியே மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அவ்வாறான தொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் தவறு இருக்கின்றது.

அச்சுறுத்தல் காரணமாகவே சுய தனிமைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அத்தகையவர்களை விடுவித்தால் அந்த அச்சுறுத்தல் நிலை சமூகமயப்படுத்தப்படும். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்கான பொறுப்பை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏற்கவேண்டும்.” – என்றார்.

பணிப்பாளரின் கருத்து........

அதேவேளை, சுகாதார பரிசோதகர் சங்கத்தின் இக்குற்றச்சாட்டு தொடர்பில் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் வினவியபோது,

“ மேற்படி நடவடிக்கையை விஞ்ஞான – தொழில்நுட்ப ரீதியில் அணுக வேண்டும். ஒரு நபரை சுய தனிமைக்கு உட்படுத்தும் போது அவர் தொடர்பை பேணியிருந்த நபர்களை அடிப்படையாகக்கொண்டே கால எல்லை தீர்மானிக்கப்படுகின்றது.

அவர்களை தொடர்பை பேணிய நபர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லையெனில் 14 நாட்கள் என்ற கோட்பாடு பொருந்தாது என்றும், அதன் அடிப்படையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” –  என்றும் கூறினார்.Advertisement