கொரோனா வைரஸுக்கும் உருளைக்கிழங்கிற்கு வந்த லேட் பிலைட் நோய்க்கும் என்ன தொடர்பு?


2020ம் ஆண்டில் மனித இனத்திற்கு பெரிய சவாலாக கொரோனா வைரஸ் இருப்பது போலவே, 1961ல் உதகையில் விளைந்த உருளைக் கிழங்குகள் ’லேட் பிலைட்’ என்ற பூஞ்சை தொற்று நோய் தாக்கத்திற்கு ஆளானபோது, ‘நீலகிரி உருளை’ என்ற ரகமே அழியும் நிலை ஏற்பட்டு ஓர் அசாதாரண சூழலை உண்டாக்கியது.
தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் பார்வையில், ஒவ்வொரு தாவரமும் பலவிதமான நோய்களை எதிர்த்து போராடி வளர்கின்றன. லேட் பிலைட்(Late Blight) தாக்கத்தில் இருந்து, உருளைக் கிழங்கு மீண்டுவந்தது ஒரு சாதனை என்கிறார்கள்.
அயர்லாந்து நாட்டில் 1845ல் உருளைக் கிழங்கு சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, உணவுப்பஞ்சம் ஏற்பட்டதற்கு காரணம் இந்த லேட் பிலைட் தொற்றுநோய்தான். இந்த நோய், அயர்லாந்து குடிமக்களின் பிரதான உணவான உருளை கிழங்கை பாதித்ததால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வறுமையில் சிக்கி, அண்டை நாடுகளுக்கு குடியேறும் நிலை ஏற்பட்டதால், இந்த பாதிப்பு 'ஐரிஷ் பஞ்சம்' என்ற அறியப்படுகிறது.

இந்தியாவில் லேட் பிலைட்

உதகையில் உள்ள நீலகிரி ஆவண மையத்தில் 1960களில் லேட் பிலைட் ஏற்படுத்திய பாதிப்பு குறித்த ஆவணங்கள் காணக்கிடைக்கின்றன. அந்த ஆவண மையத்தின் இயக்குநர் வேணுகோபால், பிபிசி தமிழிடம் நீலகிரி உருளைக்கிழங்கு சந்தித்த சவாலான காலத்தைப் பற்றி விவரித்தார்.
உருளைக்கிழங்கிற்கு வந்த லேட் பிலைட் நோய்க்கும் கொரோனாவுக்கும் என்ன தொடர்பு?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஉருளைக்கிழங்கிற்கு வந்த லேட் பிலைட் நோய்க்கும் கொரோனாவுக்கும் என்ன தொடர்பு?
''1960களில் உதகையில் ஏக்கர் கணக்கில் உருளைக் கிழங்கு பயிர்செய்வது விவசாயிகளுக்கு லாபத்தை கொடுத்தது. நீலகிரி உருளை என்ற ரகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், பல ஊர்களிலும் இந்த ரகத்தை பயிரிட்டிருந்தார்கள். லேட் பிலைட் பூஞ்சை வெறும் மூன்றே நாட்களில் அந்த பயிரை முழுமையாக தாக்கிவிடும். அடுத்துள்ள செடிகளுக்கு விரைவாக பரவத் தொடங்கிவிடும். இந்தியாவின் வட மாநிலங்களில் 1883ல் லேட் பிலைட் தாக்கம் இருத்தது. உதகையில் தொடர் மழை, காற்றில் அதிக ஈரப்பதம் போன்ற காரணங்களால் 1961 ஜூன் மாதம் முதல் வாரத்தில் பூஞ்சை தாக்கம் பலமாக இருந்தது. அதிகபட்சமாக கார் போகத்தின் 48 சதவீத உருளை சாகுபடியை அப்போது விவசாயிகள் இழந்துவிட்டனர்,''என்கிறார் வேணுகோபால்.
1961ல் ஏற்பட்ட இழப்பை இன்றும் பல விவசாயிகள் நினைவில் வைத்துள்ளனர் என்கிறார் வேணுகோபால். ''ஸ்காட்டிஷ் தாவர இனப்பெருக்க நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வில்லியம் பிளேக், உதகை விவசாயிகளை நேரில் சந்தித்து, பதற்றத்தை ஓரளவு போக்கினார். பூஞ்சை பரவலை தடுக்க பயிர்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்தினார்,''என்கிறார்.

உலகம் முழுவதும் பரவிய நோய் தொற்று

கொரோனாவை போலவே, உலக நாடுகளை லேட் பிலைட் வலம் வந்தது என்றே சொல்லலாம். அமெரிக்க, மெக்சிகோ, அயர்லாந்து, ஜெர்மனி, கனடா, போலந்து, சீனா, ஆஃப்ரிக்கா, ஜப்பான், இந்தியா, இலங்கை என பல தேசங்களிலும் லேட் பிலைட் தொற்று நோய் பாதிப்பை ஏற்படுத்தியது என ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கொரோனா வைரஸ்
லேட் பிலைட் பூஞ்சை விரைவாக நோயை பரப்பும் என்பதால், ஒரு செடியின் பாதிப்பு அதன் சுற்றுப்புறத்தில் உள்ள எல்லா செடிகளையும் பாதிக்கும் என்கிறார் தாவரவியலாளர் நரசிம்மன்.
''கொரோனா எப்படி உலகளவில் பேசப்படுகிறதோ, தாவரவியல் ஆய்வாளர்கள் மற்றும் உருளை விவசாயிகள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்பட்ட நோய் லேட் பிலைட். இந்த நோய் பரவுவது உடனே வெளியே தெரியாது. மண் துகள்களில் புகுந்த பூஞ்சை, உருளை விதையை பாதிக்கும். ஆனால் உருளை வளர்ந்து, கிழங்கு எடுக்கும்போதுதான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அறியமுடியும். விரைவாக பரவக்கூடிய நோய் என்பதால், பாதிக்கப்பட்ட உருளை செடியில் இருக்கும் பூஞ்சை அடுத்துள்ள செடிகளையும் பாதிக்கும். இதன் விளைவால், ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்தால், அந்த நிலம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.அறுவடை செய்யும்போதுதான் முழுமையான தாக்கம் என்ன என்று தெரியும். உருளைக் கிழங்கின் உள்பகுதி அழுகி, அடர் நிறத்தில் மாறிவிடும். கிழங்கு விரைவில் கெட்டுவிடும்,'' என்கிறார்.
காலப்போக்கில் ஆராய்ச்சிகள் மூலமாக லேட் பிலைட் பாதிப்பை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூஞ்சை கிருமி நாசினி கலவையில் முக்கிய பின்னர் விதை விதைக்கப்படுகிறது என்றார் அவர்.