பனிரெண்டு நாட்கள்,பசி தீர்க்கப் பாடுபட்ட எம்.பி. பாலித

#Rep/Ranjan.
கொவிட் 19 வைரஸ் பரவி வருகின்ற நிலையில், அதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தனிநபர்களும் தம்மால் இயன்ற உதவிகளை வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு செய்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களை காண முடியாத நிலையில், அவர்களில் ஒருவரை மாத்திரமே நாம் அடிக்கடி கண்டு வருகின்றோம்.
கொவிட் 19 தொற்று இலங்கையை தாக்கிய சந்தர்ப்பத்தில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்றது.
அந்த வேட்பு மனுத் தாக்கல் 19ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், 20ஆம் திகதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு சட்டத்தை அரசாங்கம் பிறப்பித்தது.
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள் எந்தவித அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்துக் கொள்ள முடியாத நிலைமையை எதிர்நோக்கினார்கள்.
அந்த சந்தர்ப்பத்தில் வாக்களித்த மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் தமது வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில், எந்தவித தயக்கமுமின்றி கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாலித்த தெவரபெரும ஒரு சாதாரண மனிதனை போன்று தானே உணவுகளை சமைத்து மக்களுக்கு பகிர்ந்தளித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
அது மாத்திரமன்றி கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக முழுமையாக முடக்கப்பட்டுள்ள அட்டுளுகம பகுதிக்குள் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று பல போராட்டங்களுக்கு மத்தியில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட காணொளிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இவ்வாறு 12 நாட்கள் தொடர்ந்து இரவு பகல் பாராது உதவிகளை செய்து வரும் பாலித்த தெவரபெரும, சிறிது நேரம் நித்திரை கொள்ளும் படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்படுகின்றது.


Advertisement