இலங்கை சர்வதேச போக்குவரத்து எப்போது தொடங்கும்?

ரஞ்சன் அருண் பிரசாத்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலம் முடக்க நிலைமை அறிவிக்கப்பட்ட போதிலும், நாளைய தினம் (20) முதல் அந்த முடக்க நிலைமை கடும் கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியில் தளர்த்தப்படுகின்றது.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய பகுதிகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கவுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.
மீண்டும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் எதிர்வரும் நாட்கள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் இராணுவ தளபதியும், கோவிட்-19 ஒழிப்புக்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் பிபிசி தமிழ் வினவியது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலைமை மிகவும் சிறந்ததாக உள்ளதென லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வாபடத்தின் காப்புரிமைPMD SRI LANKA
தாம் திட்டமிட்ட வகையில் நாட்டை சிறந்ததொரு நிலைமைக்கு கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது தற்போது மிகவும் குறைவடைந்துள்ளதாகவும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கே கடந்த காலங்களில் கொரோனா தொற்று அதிகளவில் ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஊரடங்கை தளர்த்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சர்வதேசத்திற்கு இடையிலான நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என இராணுவ தளபதியிடம் வினவப்பட்டது.
இலங்கைக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை ஆரம்பிப்பது குறித்து தற்போதைக்கு எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றை இலங்கை எதிர்கொள்ளும் ஐந்தாவது வாரம் இதுவென அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை தற்போது காணப்படுகின்ற நிலையில், சர்வதேச எல்லையை திறக்கின்றமை குறித்து எதிர்பார்க்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் ஷவேந்திர சில்வா கூறினார்.
ஷவேந்திர சில்வாபடத்தின் காப்புரிமைPMD SRI LANKA
முதலில் இலங்கையின் நிலைமையை ஸ்திரப்படுத்தியதன் பின்னரே, சர்வதேச எல்லையை திறந்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் நிலைமை அவதானிக்கின்ற விதத்தில் தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கோவிட்-19 வைரஸ் ஒழிப்பிற்காக நாட்டு மக்கள் பாரிய அர்ப்பணிப்புக்களை செய்துள்ளதாகவும், 95 சதவீதமானோர் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மதித்து செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களின் அர்ப்பணிப்பு காரணமாகவே வெகுவிரைவில் இலங்கையை வழமைக்கு கொண்டு வர முடிந்துள்ளதாகவும் ஷவேந்திர சில்வா கூறினார்.
கோவிட் 19 தொற்றை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஒரே எதிர்பார்ப்பதாக இருந்தது என அவர் தெரிவிக்கின்றார்.


Advertisement