"தொழிலை உருவாக்கும் உறுப்பினர்களே பாராளுமன்றத்திற்கு தேவை"

வி.சுகிர்தகுமார்
 

 தொழிலை வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களைவிட தொழிலை உருவாக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களே பாராளுமன்றத்திற்கு தேவை என ஜனாதிபதி கோத்தபய எதிர்பார்க்கின்றார் என அம்பாரை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் ரொஷான் மாலிந்த தெரிவித்தார்.

இரும்பை நீரில் போட்டால் மூழ்கும். அதன் பின்னர் கறல் பிடிக்கும் என்பது எமக்கு தெரியும். ஆனால் அந்த இரும்பை கப்பலாக்கி மிதக்க வைக்க முடியும். அவ்வாறாக சிந்தித்து செயலாற்றும் சக்தி ஜனாதிபதி கோட்டபயவிடம் உள்ளது. அது போலவே நமது நாட்டின் அரசியலை மாற்றும் சக்தியும் அவரிடமே உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்றில் அன்சாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தமிழ் முஸ்லிம் மக்களிடம் கோத்தபய அவர்கள் பூதம்போல் என வர்ணிக்கப்பட்டார். அவர் வந்தால் வெள்ளைவேன் வருமென்றனர். முஸ்லிம் நாட்டை விட்டு விரட்டப்படுவர் என்றனர். முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய முடியாது என்றனர். இவ்வாறு பல பொய்யான செய்திகளை உங்களிடம் கொண்டு சேர்த்தனர்.

ஆனாலும் நீங்கள் அவரை நம்பி வாக்களித்து ஜனாதிபதியாக உருவாக்கினீர்கள். அவர் ஜனாதிபதியான பின்னர் இந்த உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய நோய் பரவியது. அன்மையில் உள்ள இந்தியாவில் கூட நாளாந்தம் இரண்டாயிரம் பேர் வரை இறந்தனர். ஆனால் இலங்கையில் இதுவரையில் 11 மரணங்களே நிகழ்ந்துள்ளது. அந்த அளவிற்கு அவர் நாட்டை பாதுகாத்து வைத்திருக்கின்றார்.

அதுபோலவே கொரேனாவினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் 5000 ரூபா பணம் வழங்கினார். அவர் வழங்கும் போது தமிழா முஸ்லிமா சிங்களமா என பார்க்கவில்லை. ஜாதி பேதம் பார்க்கவில்லை. பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதுபோலவே ஜாதி பேதம் பார்க்காமல் அனைவரும் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்வோம் என்றார்.

அன்பார்ந்த இளைஞர்களே பெரியோர்களே. நமக்கு யுத்தம் தேவையில்லை. நமக்கு மதபேதம் குலபேதம் தேவையில்லை.  நமது தேவையெல்லாம் ஒரே நாடு ஒரே கொடி ஒரே மக்கள் எனும் ஒற்றுமையான  நாட்டை உருவாக்குதல். அத்தோடு பொருளாதாரத்தில் உயர்ந்த சிறந்த நாடு எனும் இடத்தை நோக்கி செல்லல். அவ்வாறு இந்த நாட்டை அபிவிருத்தி அடைய செய்ய ஜக்கிய தேசிய கட்சியாலோ அல்லது வேறு கட்சியினாலோ ஒரு போதும் முடியாது.  எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள் இந்த நாட்டை அபிவிருத்தி செய்யக் கூடிய ஒரே தலைவர் கோத்தபய ராஜபக்சவே என்பதை அனைவரும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டார்.


Advertisement