கருணாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

சிறுவர்களை போராளிகளாக இணைத்துக்கொண்டமை தொடர்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவினூடாக இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மானின் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.

சிறுவர்களை போராளிகளாக இணைத்துக் கொண்டமை தொடர்பில் , சர்வதேச சட்டங்களுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முன்தினம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

சுமார் 07 மணித்தியாலங்கள் கருணா அம்மானிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கருணா அம்மான் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் கடந்த 19 ஆம் திகதி நாவிதன்வௌி பகுதியில் அவர் வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருணா அம்மானின் கூற்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


Advertisement