”வெள்ளைக்கொடி விவகாரத்தின் போது நீங்கள் என்ன செய்தீர்கள்? கருணாவிடம் கேள்வி”

வி.சுகிர்தகுமார்
 

  வெள்ளைக்கொடி விவகாரத்தின் போது நீங்கள் என்ன செய்தீர்கள்?  சரணடைந்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினீர்களா? அதற்கான கேள்வியை அரசிடம் ஏன் நீங்கள் கேட்கவில்லை? என்பதை கருணா அம்மானிடம் கேட்க விரும்புவதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதனத்தில் இடம்பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் மாபெரும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இடம்பெற்ற தேர்தல் பரப்புரை பிரசார கூட்டத்தில் மதகுருமார் கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட வேட்பாளர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர்கள் தமிழ் மக்கள் போராளிகள்; கட்சியின் தலைவர் உள்ளிட்டவர்கள் ஆதரவாளர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் விடுதலை புலிகளை எவ்வாறு அழிக்கலாம் என வழிகாட்டிய நீங்கள் பாதுகாப்பான பிரதேசத்திற்கு மக்களை வாருங்கள் என சொல்லி அங்கு வரவழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது எடுத்த நடவடிக்கை என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு கருணாவிற்கு உள்ளதல்லவா எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம் போராட்டங்கள் பற்றி பேசுவதற்கு மாவை அண்ணனுக்கு மாத்திரம் உரிமையுள்ளது என கருணா கூறுவதாக அறிந்தேன். அந்த தகுதியுள்ள நானே தகுதியான கேள்வியை கேட்கின்றேன். இதற்கான பதிலை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் கருணாவிற்கு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.  தமிழையும் தேசியத்தையும் பற்றுறுதியுடன் பற்றிக்கொள்கின்ற அதற்காக குரல் கொடுக்கின்ற மாவட்டமாக அம்பாரை மாவட்டம் உள்ளது. அந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய கடப்பாடு இங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது என்றார்.

இதேநேரம் இந்த மாவட்டத்தில் வாக்குரிமையற்ற கருணா தனது சொந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்திருந்தால், அந்த மாவட்டத்தின் இருப்பை பாதுகாத்திருந்தால், மாவட்டத்தில் இடம்பெறும் மதமாற்றத்தை தடுத்திருந்தால்;, அங்கு உள்ள ஆலயங்கள் மற்றும் நமது அடையாளங்கள் அழிக்கப்படுவதை தடுத்திருந்தால் அந்த மக்கள் அவரை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்திருப்பார்கள்.
ஆனால் அந்த மாவட்ட மக்கள் அவரை நிராகரித்துள்ளனர். அவர் அங்கே பெற்ற வாக்கு 437 மாத்திரமே. அங்கு மக்களால் துரத்தப்பட்ட அவர் இங்கு வந்து மக்களை காப்பாற்ற போகின்றாராம்.
வாழைச்சேனை பிரதேசத்தில் காளி கோயிலை உடைத்து மீன்சந்தையும் பள்ளிவாசலையும் கட்டும்போது மௌனியாக இருந்த இவர் அப்போது கோமாவில் இருந்தாரா?

மேலும் இவர் புனர்வாழ்வு புனரமைப்பு மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது அங்கு 150 மலசல கூடங்களை மாத்திரமே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைத்து கொடுத்துள்ளார். அப்படி பார்த்தால் அவரை புனர்வாழ்வு புனரமைப்பு மீள்குடியேற்ற அமைச்சர் என்று அழைப்பதைவிட மலசல கூட அமைச்சர் என அழைப்பதே  பொருத்தம் என்றார்.

இதேநேரம் நாங்கள் சோரம் போகாதவர்கள் என்பதை கடந்த அரசாங்கத்தில் கோடிக்கணக்காக பேரம் பேசப்பட்டபோது நிரூபித்துள்ளோம். ஆகவே மக்கள் இதனை உணர்ந்து கருணாவிற்கான தகுந்த பதிலடியை வழங்குவார்கள் என நம்புகின்றேன் என்றார்.Advertisement