கோட்டாபய இணக்கம்

#RA.Pirasaath.

கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியில் - தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்வதற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் அமைக்கப்பட்ட இந்தச் செயலணி, தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளைப் புறக்கணித்து, பௌத்த - சிங்களவர்களை மட்டுமே கொண்டதாக உள்ளது என பல்வேறு கண்டனங்கள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி செயலணியில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்திருந்தார் என்றும், அதற்கு அமையவே கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியில் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமை

கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான 'ஜனாதிபதி செயலணி' ஒன்று ஸ்தாபிக்கப்படுவதாக, கடந்த ஜுன் மாதம் 02ஆம் திகதி விசேட வர்த்தமானியொன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜனரல் கமல் குணரத்ண தலைமையில், 11 பேரைக் கொண்டதாக இந்த செயலணி அமைக்கப்பட்டது.

1. கிழக்கு மாகாணத்தினுள் அமைந்துள்ள தொல்பொருள் ரீதியிலான பெறுமதிவாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல்.

2. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களிலுள்ள தொல்பொருள்களைப் பாதுகாத்தல், அவற்றினை மீள் நிர்மாணித்தல், அந்த தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்காக பொருத்தமான நடைமுறையொன்றை இனங்காணுதல் மற்றும் செயற்படுத்துதல்.

3. அவ்வாறான தொல்பொருள் இடங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளின் அளவை அடையாளம் காணுதல் மற்றும் சட்ட ரீதியாக அவ்விடங்களை ஒதுக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

4. தொல்பொருட்கள் உள்ள இடங்களின் கலாசாரப் பெறுமதிகளைப் பாதுகாத்து, இலங்கையின் தனித்துவத்தை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பிரசாரம் செய்தலும், அவ்வாறான மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கான சிபாரிசுகளைச் செய்தலும் மேற்படி ஜனாதிபதி செயலணிக்கான பணிகளாகும்.

இந்த செயலணியில் நில அளவைத் திணைக்கள ஆணையாளர், தொல்லியல் திணைக்கள பணிப்பாளர், மேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப் போலீஸ் மா அதிபர் உட்பட பௌத்த பிக்குகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.Advertisement