சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட அனுமதி


(வி.சுகிர்தகுமார்
 

  அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன் விரைவில் குறித்த ஆற்றுமுகப்பிரதேசத்தில் நிரந்தர அணைக்கட்டு (ஸ்பீல்) அமைப்பதற்கான அனுமதியும் மாவட்ட அரசாங்க அதிபரால் இன்று(02) வழங்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினார்.

கலந்துரையாடலில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்;திரன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றசான், ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர், மற்றும் அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் ரி.விவேக்சந்திரன், கல்முனை பிராந்திய கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் என்.ஸ்ரீரஞ்சன் உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் மீனவர் சங்க உறுப்பினர்கள் களப்பு முகாமைத்துவ குழுவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக சின்னமுகத்துவார பிரதேசத்திற்கு கள விஜயத்தினை மேற்கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் களநிலவரத்தினை நேரடியாக பார்வையிட்டனர்.

இதன் பின்னர் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் கலந்துரையாடலிலும் பங்கேற்றனர்.

இங்கு கருத்து தெரிவித்த விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் சுமார் 2000 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினர். ஆகவே சின்னமுகத்துவார ஆற்றுமுகப்பிரதேசத்தை அகழ்ந்து மேலதிக நீரை வெளியேற்றி வயல் நிலங்களை அறுவடை செய்து தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதேநேரம் குறித்த ஆற்றுவாயை அகழ்ந்து நீரை வெளியேற்றினால் மீனவர்கள் பாதிக்கப்படுவதுடன் குடிநீருக்கான தட்டுப்பாடும் எதிர்காலத்தில் உருவாகலாம் என உதவிப்பணிப்பாளர் என்.ஸ்ரீரஞ்சன் மற்றும் களப்பு முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆகவே இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருப்பதனால் இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் இப்பகுதியில் ஸ்பீல் அமைக்கப்பட்டு இதற்கான நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் எனவும். கேட்டுக்கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த திருக்கோவில் பிரதேச செயலாளர் இரண்டு முகத்துவாரங்கள் உள்ள நிலையில் பெரிய முகத்துவாரம் அகழ்வதனால் அதிகமான மீனவர்களும் பாதிக்கப்படுவதுடன் குடிநீர்ப்பிரச்சினை உருவாகும் என கூறினார்.

இறுதியாக சகல தரப்பு கருத்து மற்றும் நியாயத்தின் அடிப்படையில் சின்னமுகத்துவாரம் அகழ்ந்துவிடப்படும் என அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கூறினார்.

இதேநேரம் இந்த வருடத்தில்  குறித்த ஆற்றுமுகப்பிரதேசத்தில் நிரந்தர அணைக்கட்டு (ஸ்பீல்) அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபரால் உடனடி அனுமதியும்; வழங்கப்பட்டதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்று மாலை சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்படுவதற்கான நடவடிக்கை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கண்காணிப்பில் இடம்பெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.