#ரஃபால் போர் விமானங்கள் இந்தியா வந்திறங்கின


ரான்ஸிலிருந்து இந்தியா வாங்கிய 5 ரஃபால் போர் விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டு இன்று இந்தியாவில் தரையிறங்கின.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபால் போர் விமானங்கள் வாங்க இந்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.


இந்த நிலையில் முதல் கட்டமாக ஐந்து ரஃபால் போர் விமானங்கள் பிரான்சின் டஸ்ஸோ விமான நிறுவனத்தின் தளத்திலிருந்து ஜூலை 27-ம் தேதி இந்தியாவிற்குக் கிளம்பின.


ரஃபேல் போர் விமானங்கள்பட மூலாதாரம்,IAF

படக்குறிப்பு,

ரஃபால் போர் விமானங்கள். அம்பு முனை போன்ற அமைப்பில் இந்தியாவுக்குள் நுழைந்தன.


பிரான்ஸ், இந்தியா இடையிலான தொலைவு 7,000 கி.மீ. பயணத்தின் நடுவே ஐக்கிய அரபு அமீரகத்தில், ரஃபால் விமானங்கள் ஓய்வுக்காக தரையிறக்கப்பட்டன.


இதற்கு முன்னதாக வானில் பறந்துக்கொண்டுடிருக்கும்போதே, பிரான்ஸ் விமானப்படை விமானம் மூலம் ரஃபால் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.


இன்று பிற்பகல் இந்திய வான் எல்லைக்கு நுழைந்த ரஃபால் விமானங்களுக்கு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் ரேடியோ சிக்னல் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்பு முனை போன்ற வடிவத்தில் பறந்து வந்த ரஃபால் விமானங்களுக்கு இந்திய விமானப்படையின் இரு சுகோய்-30 ரக விமானங்கள் வானில் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றன.


ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமான தளத்தில் ரஃபால் விமானங்கள் தரையிறங்கின.


ரஃபால் தரையிறங்கும் காட்சி - ராஜ்நாத்சிங் ட்வீட்


Skip Twitter post, 1


End of Twitter post, 1

''ரஃபேல் விமானங்கள் பாதுகாப்பாக அம்பாலாவில் தரையிறங்கின. இவை இந்திய ராணுவத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் துவங்க உள்ளன. பல்திறன் ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையின் திறன்களை மேம்படுத்தும்'' என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.


புகார்கள்

ரஃபால் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தில் இருந்து வாங்குவதில் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதாகவும், தொழில்நுட்பப் பறிமாற்ற நடவடிக்கையில் இருந்து இந்திய பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிட்டட் விலக்கப்பட்டதாகவும் மோதி அரசு மீது புகார்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.