இரத்தினபுரிக்கு தேசியப்பட்டியல்’ – முற்போக்கு கூட்டணியிடம் கோரிக்கை


 
ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு 6 ஆசனங்கள் கிடைத்துள்ள பின்னணியில், அந்த கட்சிக்கு கிடைக்கும் தேசிய பட்டியல் உறுப்புரிமையை இரத்தினபுரிக்கு வழங்க தலைமைத்துவம் இந்த முறையேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் கோரிக்கை விடுக்கின்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரகுமாருக்கு அந்த தேசிய பட்டியல் உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இரத்தினபுரி மாவட்டத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவம் மற்றுமொரு முறை இல்லாது போயுள்ள பின்னணியிலேயே அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரியில் போட்டியிட்ட சந்திரகுமார் கணிசமான அளவு வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளமையினால், தேசிய பட்டியல் உறுப்புரிமையை அவருக்கு வழங்க தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் சந்திரகுமார் கணிசமான அளவு வாக்குகளை பெற்றுக்கொண்ட போதிலும், இரத்தினபுரிக்கு கிடைக்கவிருந்த தேசிய பட்டியல் உறுப்புரிமை கடந்த முறையும் இல்லாது போயிருந்ததை எஸ்.ஆனந்தகுமார் இதன்போது நினைவூட்டினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தேசிய பட்டியலுக்கு ஒருவர் ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள போதிலும், நுவரெலியா மாவட்டத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தலின் ஊடாக 3 பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், நுவரெலியா மாவட்டத்திற்கு மற்றுமொரு பாராளுமன்ற உறுப்புரிமை அவசியமற்றது என கூறியுள்ள எஸ்.ஆனந்தகுமார், அந்த பாராளுமன்ற உறுப்புரிமையை சந்திரகுமாருக்கு வழங்க கட்சி தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இரத்தினபுரிக்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காகவே தான் போராடுவதாகவும், அந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த சந்தர்ப்பத்திலாவது இரத்தினபுரி தமிழர்களின் நாடி துடிப்பை அறிந்து ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை வழங்கும் பொறுப்பு தமிழ் முற்போக்கு கூட்டணி வசம் உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.