எரிந்து நாசம்




 (க.கிஷாந்தன்)

 

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரக்கலை மத்திய பிரிவில் 10.08.2020 இரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

 

தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனையடுத்து லிந்துலை பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

 

இத்தீவிபத்தில் எவ்வித உயிர் ஆபத்தோ, காயங்களோ ஏற்படாத போதிலும் உடைமைகளுக்கு தேதம் ஏற்பட்டுள்ளன.

 

இத் தீவிபத்து காரணமாக பலரது அத்தியவசிய ஆவணங்கள் உடுதுனிகள், தளபாடங்கள் போன்றன சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

 

இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம், உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

 

இத் தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன்  இது தொடர்பான விசாரணைகளையும் சேதவிபரங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கும் லிந்துலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.