அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளிப் பெண்


அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறவுள்ளது.

குடியரசுக் கட்சியின் சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

முன்னதாக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான போட்டியில் கடுமையாக ஈடுபட்டு தோற்றவர் கமலா.

கமலா ஹாரிஸுக்கும் குடியரசுக் கட்சி துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸுக்கும் அக்டோபர் 7ஆம் தேதி விவாதம் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே பெண்கள் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர்; 2008ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பாக சாரா பாலினும், 1984ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜெரால்டின் ஃபெரொரோவும் போட்டியிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் வெற்றி பெறவில்லை.

அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டுமே அதிபர் வேட்பாளராக கருப்பின பெண்ணை நிறுத்தியதில்லை. இதுவரை யாரும் அதிபராக இருந்ததும் இல்லை.

ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ்

யார் இந்த கமலா ஹாரிஸ்?

கமலா ஹாரிஸுக்கு 55 வயதாகிறது. கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்.

கமலா ஹாரிஸின் தாய் சென்னையை சேர்ந்தவர். அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள்.

கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றப்பின், அவரின் தாய் ஷியாமலா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார் கமலா ஹாரிஸ்.

கமலாவின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.

கமலாவின் தாயார் இந்தியாவிற்கு செல்லும்போதெல்லாம் அவருடன் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார் கமலா. மேலும் தனது இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்தார் கமலா.

இருப்பினும் தனது தாய் ஒக்லாந்தின் கருப்பின கலாசாரத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார் என்றும், தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்தார் என்றும் கமலா தெரிவித்துள்ளார்.

"எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்." என தனது சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகதான் பார்க்கும் எனவே நாங்கள் தன்நம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்," என கமலா குறிப்பிட்டிருந்தார்.

டிசம்பர் மாதம் ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த அதிபர் வேட்பாளர் போட்டியில் தோல்வி அடைந்தார் நிலையில் தற்போது துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸ் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பல்கலைக்கழக வாழ்க்கை தனது வாழ்க்கையை செதுக்குவதில் பெரிதும் உறுதுணையாக இருந்தது என ஹாரிஸ் குறிப்பிடுவார்.

தனது அடையாளம் குறித்து தனக்கு எந்த ஒரு அசெளகரியமும் இதுவரை ஏற்படவில்லை என்றும், எளிமையாக சொல்லவேண்டுமானால் `நான் ஒரு அமெரிக்கர்` என்றும் கமலா ஹாரிஸ் குறிப்பிடுவார்.

2019ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்டுக்கு பேசிய அவர், "நிறத்தாலோ அல்லது பின்புலத்தாலோ ஒருவர் அரசியல்வாதியாக கூடாது. "நான் யாரோ அதில் சிறப்பாக உள்ளேன். உங்களுக்கு தெளிவு தேவைப்படலாம் ஆனால் நான் சிறப்பாக உள்ளேன்," என தெரிவித்திருந்தார்.

துணை அதிபர் போட்டியில் கமலா வெற்றி பெற்றால் 2024ஆண்டுக்குள் அதிபர் போட்டியில் மீண்டும் பங்குபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்றளவில் அவர் ஜனநாயகக் கட்சியில் எதிர்காலத்திற்கான ஒரு வலுவான சக்தியாக உள்ளார் என பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளர் ஆண்டனி சுர்சர் தெரிவிக்கிறார்

நான்கு வருட ஹாவார்ட் பல்கலைக்கழக படிப்புக்கு பின் கமலா கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் அலமேடா கவுண்டியின் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார்.

2003ஆம் ஆண்டு சான் ஃபிரான்ஸிஸ்கோ மாவட்டத்தின் அட்டர்னிஜெனரல் ஆனார்.

அதன்பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலானார். மேலும் கலிஃபோர்னியாவின் முதல் பெண் மற்றும் முதல் ஆப்ரிக்க அமெரிக்க பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

இரு முறை அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வளரும் நட்சத்திரமாக அறியப்பட்டுள்ளார்.