அஜர்பைஜான் - அர்மீனியா போர் நிறுத்தம்


நாகோர்னோ - காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக சண்டையிட்டு வந்த அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் தற்காலிக சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நற்பகல் முதல் இந்த தற்காலிக சண்டை நிறுத்தம் அமலுக்கு வரும்.

போர் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை பரிமாற்றம் செய்துகொள்ளவும், எதிர் தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து தங்கள் தரப்பினரின் இறந்த உடல்களை மீட்கவும் இந்த சண்டை நிறுத்தம் பயன்படுத்திக்கொள்ளப்படும்.

கடந்த இரு வாரங்களாக நடக்கும் மோதலில் இரு நாட்டு ராணுவத்தினர், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சுமார் 70,000 பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறினார்.

இந்த சண்டை நிறுத்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் வெளியிட்டார்.

(L-R) Azerbaijan's Foreign Minister Jeyhun Bayramov, Russian Foreign Minister Sergei Lavrov and Armenian Foreign Minister Zohrab Mnatsakanyan during trilateral talks

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையே 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில் இருநாட்டு எல்லையிலும் ராணுவங்கள் மோதிக்கொண்டிருந்தன.

நாகோர்னோ - காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் பிரச்சனை, செப்டம்பர் 27 அன்று ஆயுத மோதலாக உருவெடுத்தது.

நாகோர்னோ - காராபாக் பகுதி அலுவல்பூர்வமாக அஜர்பைஜான் நாட்டுக்கு சொந்தமானது. ஆனால், அப்பகுதி அர்மீனிய இனத்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

அர்மீனியா - அஜர்பைஜான் இடையே நடக்கும் எல்லை மோதல் குறித்து கீழே உள்ள இணைப்பில் விரிவாகப் படிக்கலாம்.Advertisement