கிரிக்கெட் கமென்ட்டேட்டர்களுக்கு ஒரு கேள்வி


 


ஐ.பி.எல் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் தமிழ் வர்ணனையுடன் ஒளிபரப்பப்படுகின்றன. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகவே கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழ் வர்ணனையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கி வருகிறது. ஆங்கில வர்ணனையில் இருப்பது போன்ற தரம், தமிழ் வர்ணனையில் இருப்பதில்லை என்பது ஆரம்பம் முதலே கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து வரும் விமர்சனம். இதைப் பற்றி நிறைய மீம்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இவற்றைத் தாண்டி, தமிழ் வர்ணனைக்கு எதிரான புதியதொரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அது, நிறவெறி.


கடந்த 4-ம் தேதி நடந்த, மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான போட்டியில், வர்ணனையில் இருந்த ஆர்.ஜே பாலாஜி, பொல்லார்டை பற்றிப் பேசும்போது, `எந்தக் கடையில அரிசி வாங்குறாருனு தெரியலியே', `பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்தா மூக்கு மட்டும்தான் தெரியும்', `எங்க வீட்டுக்கெல்லாம் அவரை சாப்பிடக் கூப்பிட மாட்டேன்', `மலை மாதிரி இருக்காரு' என்றெல்லாம் பேசியது பெரும் எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பெற்று வருகிறது.

இதை மேலோட்டமாகக் கேட்டுவிட்டு, `என்டர்டெயின்மென்ட்தானே...' என்று சிலர் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இவை நிச்சயமாக உருவ கேலி மற்றும் பொல்லார்ட் சார்ந்து இருக்கும் நிறம் மீதான கேலிதான். கறுப்பின கிரிக்கெட் வீரர்கள் மீது மட்டும் குறிப்பாகச் செய்யப்படும் தனித்த உடல் சார்ந்த கேலிகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

பொல்லார்ட் மட்டுமல்லாமல், கொல்கத்தா அணியின் ரஸ்ஸல், டெல்லி அணியின் ககிசோ ரபர்டா, ஷிம்ரான் ஹெட்மையர் போன்ற வீரர்கள் மீதும் தொடர்ந்து இதுபோன்ற உருவ கேலிகளை இந்த ஐ.பி.எல்லில் பல்வேறு போட்டிகளில் தொடர்ந்திருக்கிறார்.

மேலும், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை அணியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான அர்னால்டு ரஸ்ஸல், ஐ.பி.எல் தமிழ் வர்ணனையில் இணைகிறார். அவரிடம், அவர் பேசும் ஈழத்தமிழைப் பேசுவதுபோல் கேலி செய்வதையும் ஆர்.ஜே பாலாஜி பலமுறை செய்திருக்கிறார். அர்னால்டு ரஸ்ஸல் இதை எப்படி எடுத்துக்கொண்டாலும், ஒன்றிரண்டு முறைக்கு மேல் அந்தக் கேலி ரசிகர்களுக்குக் கேட்பதற்கு மிக சங்கடமாகவே இருக்கிறது.

இந்த ஐ.பி.எல்லில் வர்ணனை தொடர்பாக சர்ச்சை வருவது இது முதல்முறை கிடையாது. ``ஊரடங்குக் காலத்தில் அனுஷ்கா ஷர்மாவின் பௌலிங்கில் மட்டும்தான் கோலி பயிற்சி செய்துள்ளார். அந்த வீடியோவை நான் பார்த்தேன், அந்தப் பயிற்சி மட்டும் அவருக்குப் போதாது என நினைக்கிறேன்" என்று சுனில் கவாஸ்கர் ஹிந்தி வர்ணனையில் பேசியது, அவருக்கு அனுஷ்கா ஷர்மா எதிர்ப்பு தெரிவித்தது என்று 10 நாள்களுக்கு முன்புதான் கிரிக்கெட் கமென்ட்ரியில் ஆணாதிக்க கருத்துக்கு எதிரான சர்ச்சை வெடித்தது.

Virat Kohli

`கவாஸ்கரின் வர்ணனையில் அனுஷ்காவுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான செக்ஸிஸ்ட் கருத்து எதுவும் இல்லையே...' என்றுகூட மேலோட்டமாக சிலர் நினைக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகள் நிச்சயமாக ஆணாதிக்க கருத்திலிருந்துதான் வருகின்றன. மனைவியை வைத்து ஆண்கள் செய்யும் ஜோக்குகளில்தான் இதுவும் அடங்கும். அதில் நிச்சயமாக ஆணாதிக்கக் கூறுகள் இருக்கின்றன.

கோலியின் ஆட்டத்தைப் பற்றி விமர்சிக்க எத்தனையோ டெக்னிக்கல் விஷயங்கள் இருந்தும், அனுஷ்கா ஷர்மாவைக் குறிப்பிடவேண்டிய அவசியம் என்ன? கவனித்துப் பார்த்தால், அதே சுனில் கவாஸ்கர் ஆங்கில வர்ணனையும் தொடர்ந்து செய்கிறார். ஏன் இப்படியான கமென்ட்டை அவர் அங்கு செய்யவில்லை? அப்படி எப்போதும் செய்யமாட்டார் சுனில் கவாஸ்கர். அப்படிச் செய்தால், அவரது கருத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு வலுக்கும்.

2006-ல் தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லாவின் மதம் சார்ந்து குறிப்பிட்ட ஒரு வார்த்தைக்காக, முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஆணாதிக்கம் குறித்தும், செக்ஸிஸம் குறித்தும் உலகம் முழுவதும் மாறிவரும் புரிந்துணர்வுக்கு நடுவே, இதுபோன்ற கருத்தை சுனில் கவாஸ்கர் ஆங்கில வர்ணனையில் கூறியிருந்தால், நிச்சயமாக டீன் ஜோன்ஸின் நிலைதான் இவருக்கும் ஏற்பட்டிருக்கும்.

RJ Balaji
RJ Balaji
Photo: Twitter / RJ_Balaji

இந்திய ஒன்றியத்தில் பேசப்படும் மொழிகளில் செய்யப்படும் கிரிக்கெட் வர்ணனைகளில், ஆணாதிக்க, நிறவெறி வக்கிரங்களும் சேர்ந்தே பகிரப்படுகின்றன. இதற்குக் காரணம் இந்த வர்ணனைகளை செய்பவர்கள், தங்களுக்குள் தெரிந்தோ தெரியாமலோ இருக்கும் நிறவெறி, ஆணாதிக்க கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். மற்றொன்று, இந்திய ஒன்றிய மொழிகளில் செய்யப்படும் வர்ணனை, இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறிப்பாக டார்கெட் செய்கிறது. ஆணாதிக்க, சாதிய, நிறவெறிபிடித்த ஒரு சமூகத்தை இந்த மாதிரியான வர்ணனைகள் ஈர்க்கின்றன என்பது கசப்பான உண்மை. மேலும், வர்ணனையாளர்கள் பெரும்பாலும் உயர்சாதி - வர்க்கங்களிலிருந்து வருவதால் இதுபோன்ற கேலிகள் அவர்களுக்கு சாதாரணமாக இருக்கிறது. அதற்கு எதிராக மற்ற சக வர்ணனையாளர்களிடமிருந்தும் கேள்வி எழுப்பப்படாத நிலையில், அது கண்டனங்களின்றி நகர்ந்து விடுகிறது.

தற்போது எழுந்திருக்கும் சர்ச்சையைப்போல, யாரேனும் சில முற்போக்காளர்கள் இதற்கு எதிராகப் பேசினால்தான் உண்டு என்கிற நிலையில்தான் கிரிக்கெட் இருக்கிறது. இந்திய ஆண்கள் கிரிக்கெட், உயர்சாதி ஜென்டில்மென்களின் கேம். கிரிக்கெட்டும் சரி, கிரிக்கெட் வர்ணனையும் சரி, அவை ஜனநாயகப்படுத்தப்படாதவரை இந்த மாதிரியான `டோன் டெஃப்' நிறவெறி, சாதிய, உடல்சார்ந்த, செக்ஸிஸ்ட் கேலி கமென்டுகளால்தான் நிரப்பப்படும்.