முன்னேறிய கொல்கத்தா



 ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களமிறங்கின. இதில் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.

சரண் அடைந்த ராஜஸ்தான் அணி

ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய சேஸிங்கை வெற்றிகரமாகச் செய்த அணி என்ற பெருமை கடந்த ஞாற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கிடைத்தது.

ஆனால் இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களிடம் எந்தவித போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் முழுமையாக சரண் அடைந்தது அந்த அணி.

175 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ராஜஸ்தான் 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது, அந்த அணியில் டாப் மற்றும் மிடில் ஆர்டரில் விளையாடிய பேட்ஸ்மேன்களில் நான்கு பேர் இரட்டை இலக்கத்தில் கூட ரன்கள் குவிக்க முடியாமல் அவுட் ஆகினர்.

கொல்கத்தா அணி

ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்தை மூன்று ரன்களில் வெளியேற்றினார் கொல்கத்தா பௌலர் கம்மின்ஸ். அங்கிருந்து ஆரம்பித்த சரிவில் இருந்து இடையில் எந்த மேஜிக்கையும் யாரும் நிகழ்த்தவில்லை.

சுனில் நைரன் வீசிய 19-வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் விளாசினார் டாம் கரண், அது மட்டுமே ராஜஸ்தானுக்கு இந்த போட்டியில் அமைந்த ஒரே ஆறுதல் விஷயம். சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு ஆல்ரவுண்டராக உருவெடுத்து வரும் சாம் காரனின் சகோதரர் தான் இந்த டாம் கரண்.

நேற்றைய போட்டியில் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் இவர். கடந்த போட்டியில் ஒரே ஓவரில் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்த டெவாட்டியா இந்த போட்டியில் வருண் விரித்த வலையில் ஏமாந்து போல்டானார்.

சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள்

கொல்கத்தா அணியின் பௌலர்களில் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர்கள் ஷிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி என இருவர் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்த வருண் சக்கரவர்த்தியும் கொல்கத்தா அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினார். இந்த மூன்று பௌலர்களும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணி

நாகர்கோட்டி ஃபீலடிங்கிலும் அபாரமாக செயல்பட்டார். ஜோஃப்ரா ஆர்ச்சரின் கேட்சை நாகர்கோட்டி பிடித்த விதம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்த்திருக்கும்.

பேட்டிங்கில் கவனம் தேவை

பந்துவீச்சில் கொல்கத்தா சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் இன்னும் முழு திறமையை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக தொடக்க ஆட்டக்காராக சுனில் நரேனை களமிறக்கும் உத்தி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது. கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் இதுவரை மிக மோசமாக செயல்பட்டுள்ளார். ஆண்ட்ரே ரஸ்ஸல் இன்னும் மிகப்பெரிய இன்னிங்க்ஸை விளையாடவில்லை.

இளம் வீரர் சப்மன் கில் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரரும் கடந்த ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணியின் கேப்டனுமான இயான் மார்கன் ஆகிய இருவருமே அணிக்கு ஓரளவு ரன்களைச் சேர்த்து வருகிறார்கள். நேற்றைய போட்டியில் இளம் வீரர் கில் 47 ரன்கள் எடுத்து ஜோஃப்ரா பந்தில் அவுட் ஆனார்.

நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் ஏழாவது இடத்தில இருந்து இரண்டாவது இடத்திற்கு தாவியுள்ளது கொல்கத்தா அணி. ராஜஸ்தான் அணி முதலிடத்தில் இருந்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.