கல்முனை மாநகர சபை அமர்வில்,அமளி துமளி


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்களை தெரிவு செய்யும் விடயத்தில் ஏற்பட்ட சலசலப்பினால் சபை மறு அறிவித்தல் வரை முதல்வரினால் ஒத்திவைக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் 34 ஆவது சபை அமர்வு முதல்வர் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் சபா மண்டபத்தில்  இன்று(27) மாலை இடம்பெற்றது.

இதன் போது சமய ஆராதனையுடன் கடந்த 2020.12.30 ஆந் திகதி கூட்டறிக்கையை உறுதிப்படுத்தல் முதல்வரின் உரை என்பன கிரமமாக இடம்பெற்றன.

தொடர்ந்து நிலையியற் குழுக்களுக்கான உறுப்பினர்களின் தெரிவு இடம்பெற்றது.

இதன் போது கல்முனை மாநகர  தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் கதிரமலை செல்வராசா நிலையியற் குழுக்கள் தெரிவு தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை அடிக்கடி எழுந்து முன்வைத்தார்.

அவ்வாறு அவர் முன்வைக்கின்ற போது அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் சபையை அவமதிப்பதாகவும் முதல்வர் தெரிவித்ததுடன் சபை நடவடிக்கையில் கலந்து கொள்ளாத வகையில் அவ்வுறுப்பினருக்கு  தற்காலிக தடை விதித்தார்.

அத்துடன் இவ்வாறு தடை விதித்து சபையை விட்டு வெளியேற்றுமாறு படைக்கல சேவிதரை(ஆராச்சி) அழைத்து  குறித்த  உறுப்பினரை வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு சபை நடவடிக்கையை தொடர நடவடிக்கை எடுத்தார்.

எனினும்   ஏனைய சக எதிர்கட்சி உறுப்பினர்கள் அவ்வாறு சம்பந்தப்பட்ட உறுப்பினரை வெளியெற்ற முடியாது என தடுத்ததுடன் அமளிதுமளி சபையில் ஏற்பட்டது.

இதனால் சபை நடவடிக்கையை மறுஅறிவித்தல் வரை   ஒத்திவைப்பதாக முதல்வர் அறிவித்தார்.

பின்னர் சபையில் பொலிஸாரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் சபை ஒழுங்குகளை  பேணுமாறு கோரி கலைந்து சென்றனர்.

மேலும் இந்த சபை அமர்வை முன்னிட்டு கல்முனை மாநகர சபை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.