அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கும் நிகழ்வு


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அமைதியான ஒழுக்கமான சிறந்த மனிதர்களைக் கொண்ட புனித தேசத்தை கட்டியெழுப்பும் உயரிய நோக்கின் அடிப்படையில் பயணிக்கும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தோடு இணைந்து கலை  கலாச்சார பாரம்பரியங்களை வளர்த்துப் பாதுகாப்பதற்காக அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச  செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில்  அர்ப்பணிப்புடன் பாடுபடும் பெறுமதிமிக்க கலைஞர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று(24)  நாவிதன்வெளி கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில்  பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம் ஷினாஸ்   ஒருங்கிணைப்பில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன்  தலைமையில்    நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும்,மாவட்ட சமூர்த்தி பணிப்பாளருமான வி.ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் அம்பாறை மாவட்ட செயலகம்,  நாவிதன்வெளி பிரதேச செயலகம் ,கலாச்சார அதிகார சபை, ஆகியன இணைந்து நடத்திய இந் நிகழ்வில் இப் பிரதேசத்தில் பல்துறைகளில் தெரிவு செய்யபட்ட 10 கலைஞர்களுக்கான பாராட்டும்  கெளரவிப்பும் நடைபெற்றதுடன் ஏனைய அதிதிகளாக   மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம் ரின்ஸான்  நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி  ஆர்.லதாகரன்    ,பிரதேச ஆயுள் வேத வைத்தியர் சுகைல்   , நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், உட்பட கலைஞர்கள் பலர் கலந்து  கொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன் நிகழ்வில் ஆரம்பத்தில் நாவிதன்வெளி பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார அலுவல்கள் திணைக்கள விளம்பர பலகையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் இலைக்கஞ்சி உட்பட கொரோனா எதிர்ப்பு ஆயுள்வேத மருந்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது