பும்ராவை மணம் முடித்தார், சஞ்சனா கணேசன்

 


இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. தன் டிவிட்டர் பக்கத்தில் பும்ரா இந்தத் தகவலை உறுதிப்படுத்த, புதிய தம்பதியை கிரிக்கெட் உலகம் வாழ்த்திக்கொண்டிருக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் டி-20 தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக விடுப்பு கேட்டிருந்தார் பும்ரா. அப்போதிருந்தே பும்ராவுக்குக் கல்யாணம் என்றும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசன்தான் மணப்பென் என்றும் பரவலான பேச்சு அடிபடத் தொடங்கியது. பும்ராவைப் பாராட்டி சஞ்சனா போட்ட ட்வீட்களையெல்லாம் வைரலாக்கினார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இந்நிலையில் இன்று தங்கள் ட்வீட் மூலம் அந்தச் செய்தியை உண்மையாக்கியுள்ளது பும்ரா - சஞ்சனா தம்பதி.

"நீங்கள் தகுதியானவராக இருந்தால், காதல் உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அன்பின் துணைகொண்டு இருவரும் இணைந்து புதியதோர் பயணத்தைத் தொடங்குகிறோம். எங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தினங்களில் இதுவும் ஒன்று. எங்கள் திருமணச் செய்தியை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று இருவரும் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் தனித்தனியே பதிவிட்டிருக்கிறார்கள்.

ஜஸ்ப்ரித் பும்ரா, இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர பந்துவீச்சாளர். தன் வித்யாசமான பந்துவீச்சு முறையாலும், துல்லியமான யார்க்கர்களாலும் பெயர் பெற்ற பும்ரா, இன்று உலக கிரிக்கெட் அரங்கின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக விளங்குகிறார். அஹமதாபாத்தில் பிறந்தவரான அவர், 2013 ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு வயது 19. முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியவர், அடுத்தடுத்த சீசன்களில் அந்த அணியின் அசைக்க முடியாத சொத்தாக மாறினார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், 2016-ம் ஆண்டு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

அதன்பிறகு டி-20, ஒருநாள், டெஸ்ட் என ஒவ்வொரு ஃபார்மட்டிலும் தன்னை நிரூபித்து, இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஆளாகியிருக்கிறார் பும்ரா. இதுவரை 250 சர்வதேச விக்கெட்டுகள் வீழ்த்தி பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒருநாள் போட்டிக்கான சர்வதேச ஐ.சி.சி ரேங்கிங்கில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பும்ரா, டெஸ்ட் ரேங்கிங்கில் பத்தாவது இடத்திலும், டி-20 ரேங்கிங்கில் 18-வது இடத்திலும் இருக்கிறார்.

ரசிகர்களை கவர்ந்த சஞ்சனா

உலகின் மிரட்டலான பௌலர்களுள் ஒருவரான பும்ராவை மணந்திருக்கும் இந்த சஞ்சனா கணேசன் யார்?

சஞ்சனா

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் சஞ்சனா கணேசன். புனேவைச் சேர்ந்தவரான அவர், பொறியியல் பட்டதாரி. கல்லூரியிலிருந்து வெளியேறும்போதே கையில் 3 வேலைகள் பெற்றிருந்தவர், தங்க மெடலும் வாங்கியிருந்தார். செய்தித்தாளில் வந்த ஒரு 'ஃபெமினா' மாடலிங் விளம்பரம் பார்த்து அவரின் பெற்றோர்கள் அதை முயற்சி செய்யச் சொல்ல, தனக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மாடலிங் துறையில் இறங்கினார் சஞ்சனா.

Femina Officially Gorgeous, ஃபெமினா மிஸ் இந்தியா புனே போன்ற மாடலிங் போட்டிகளில் பங்கேற்றவர், 2014-ம் ஆண்டு நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று, 24 பேர் கொண்ட இறுதிச் சுற்றுக்கும் முன்னேறினார். அதன்பிறகு தனியார் தொலைக்காட்சியான MTV நடத்தும் ஸ்ப்லிட்ஸ்விலா (Splitsvilla) ரியாலிட்டி ஷோவின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். ஒரு போட்டியின்போது ஏற்பட்ட காயத்தால், சில நாள்கள் கழித்து அவராகவே அந்தப் போட்டியிலிருந்து வெளியேறினார். அந்த சீசனில் 17-வது இடம் பெற்றார் சஞ்சனா கணேசன்.

இந்தப் போட்டியில் பங்கேற்றபோதுதான் சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்தார் சஞ்சனா. அதைப் பார்த்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலுவலகத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. தொகுப்பாளர் தேர்வுக்கு அவரை ஆடிஷன் செய்ய அழைத்திருக்கிறார்கள். "நான் விளையாட்டைப் பார்த்து வளர்ந்த ஆள் கிடையாது. விளையாட்டின் விதிகளைப் பற்றியோ, டாப் வீரர்களைப் பற்றியோ அப்போது நான் தெரிந்திருக்கவில்லை" என்று பின்னொரு நாளில் கூறியிருந்தார் சஞ்சனா. ஆனால், அந்த வாய்ப்பு தன்னைத் தேடி வந்தபோது அவர் மறுக்கவில்லை. தயங்கி நிற்கவில்லை. அவர் திறனை அறிந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் அவரை தங்கள் தொகுப்பாளர்கள் குழுவில் இணைத்துக்கொண்டது.

2015 ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரிலிருந்து தன் விளையாட்டு தொகுப்பாளர் பயணத்தைத் தொடங்கினார் சஞ்சனா. அதன்பிறகு அடுத்தடுத்து நடந்த பல்வேறு முன்னணி தொடர்களிலும் தொகுப்பாளராகப் பங்கேற்று பிரபலமடைந்தார். இந்தியாவில் நடந்த 2016 டி-20 உலகக் கோப்பை, 2018 டி-20 உலகக் கோப்பை என மிகப்பெரிய தொடர்களில் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

சஞ்சனா கணேஷ்

2017-ம் ஆண்டு 'தி நைட் கிளப்' (The Knight Club) எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கத் தொடங்கினார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்களோடு உரையாடும் நிகழ்ச்சியான அது, அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக கொல்கத்தா ரசிகர்களின் பிரியமான தொகுப்பாளர் ஆனார். கொல்கத்தாவும் அவருக்கு ஃபேவரட் அணியானது. அதனால், இப்போது பல ரசிகர்களும் "கொல்கத்தா ரசிகையான சஞ்சனா இனி எந்த அணியை ஆதரிப்பார்" என்று விளையாட்டாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்பிறகும் பல முன்னணி தொடர்களில் பணிபுரிந்தார் சஞ்சனா. குறிப்பாக, 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின்போது அவர் தொகுத்து வழங்கிய 'மேட்ச் பாயின்ட்' உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் அவர் தொகுப்பாளராகப் பங்கேற்றார்.

சஞ்சனாவின் தந்தை கனேசன் ராமசாமி தமிழகத்தைச் சேர்ந்தவர். புனேவிலுள்ள அலானா மேலான்மை அறிவியல் நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார். அம்மா சுஷ்மா கனேஷன் மராத்தி. அவர் வழக்கறிஞராக உள்ளார். சகோதரி ஷீதல், பல் மருத்துவர்.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருவருமே பிரபலமானவர்கள் என்பதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இருவரையும் வாழ்த்திக்கொண்டிருக்கிறது.