டெல்லி அணி 18.4 ஓவரிலேயே தன் வெற்றிக் கொடியை நாட்டிவிட்டது


 


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, நேற்று (10.04.2021 சனிக்கிழமை) மாலை மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

இப்போட்டியில் டெல்லி அணி 18.4 ஓவரிலேயே தன் வெற்றிக் கொடியை நாட்டிவிட்டது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை அணி தோல்வியைத் தழுவி புள்ளிகள் பட்டியலில் தன் கணக்கைத் தொடங்கி இருக்கிறது.

டாஸ் வென்ற ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி, சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தது. சென்னை அணி சார்பில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் ஒற்றை இலக்க ரன்களிலும், டூப்ளசி டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பி சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 3 ஓவர்கள் முடிவில் 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிக் கொண்டிருந்தது சென்னை.

சுரேஷ் ரெய்னா களமிறங்கி விக்கெட் வீழ்ச்சியை தடுத்து, ரன் குவிப்பின் பக்கம் சென்னை அணியை அழைத்துச் சென்றார். ரெய்னா மற்றும் மொய்ன் அலி இணை 53 ரன்களைக் குவித்திருந்த போது, மொய்ன் அலியின் விக்கெட் பறிபோனது.

அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடுவும் ரன் குவிப்பதில் கவனம் செலுத்தினார். ரெய்னா ராயுடு இணை 33 பந்துகளில் 63 ரன்களைக் குவித்து அதிரடி காட்டி சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. டாம் கர்ரன் வீசிய 14-வது ஓவரில் கேட்ச் கொடுத்து தன் விக்கெட்டை இழந்தார் ராயுடு.

அடுத்து ரெய்னாவுக்கு துணையாக ரவிந்த்ர ஜடேஜா களமிறங்கி நிதானம் காட்டினார். ஆனால் சென்னைக்கு அதிர்ஷ்டம் இல்லை.16-வது ஓவரின் முதல் பந்தில் ரெய்னா ரன் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கி சென்னை அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி இரண்டு பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியது சென்னை ரசிகர்களை அதிகம் கவலை கொள்ளச் செய்தது.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இளம் வயது சாம் கர்ரன், ஜடேஜா உடன் இணைந்து பொறுப்பாக ரன்களைக் குவித்தார். ஆனால் 20-வது ஓவரின் கடைசி பந்தில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 20 ஓவர் முடிவில் 188 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது சென்னை.

டெல்லி தரப்பில் க்ரிஸ் வோக்ஸ், அவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் டாம் கர்ரன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். அவேஷ் கான் நான்கு ஓவர்களை வீசி 23 ரன்களைக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை (டூப்ளசி மற்றும் தோனி) வீழ்த்தி பலரின் கவனத்தை ஈர்த்தார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

பட மூலாதாரம்,BCCI/IPL

மும்பை வான்கடே மைதானத்தில் 188 ரன்கள் என்பது சேஸ் செய்ய முடியாத ஸ்கோர் ஒன்றும் இல்லை என்றாலும், தொடக்கத்திலேயே சொதப்பிய சென்னை அணிக்கு 188 ரன்கள் என்பது ஓரளவுக்கு நல்ல ஸ்கோர் தான் எனக் கூறப்பட்டது.

அடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் சார்பாக ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். 188 ரன்கள் என்கிற இலக்கை அத்தனை எளிதில் சேஸ் செய்துவிட முடியாது என்பதை அறிந்திருந்த ஓப்பனர்கள், நிதானமாகவும், பொறுப்போடும் ரன்களைக் குவித்தனர். ப்ரித்வி ஷா 38 பந்துகளில் 72 ரன்களையும், ஷிகர் தவான் 54 பந்துகளில் 85 ரன்களையும் அடித்து டெல்லியின் வெற்றியை எளிதாக்கினர்.

இதற்கு முந்தைய சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக ஜொலிக்காத ப்ரித்வி ஷா, கடுமையான பயிற்சிக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் மீண்டும் தன் பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். 38 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என தெறிக்கவிட்டு டெல்லி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தார் எனலாம். 16.3 ஓவர் முடிவில் 167 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது டெல்லி.

அடுத்து களமிறங்கிய டெல்லி அணித் தலைவர் ரிஷப் பந்த் நிதானமாக ஆடினார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 14 ரன்களைக் குவித்து தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ஐபிஎல் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் போட்டியிலேயே, 19-வது ஒவரின் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார் ரிஷப் பந்த். 18.4 ஓவரில் 3 விக்கெட்டு இழப்புக்கு 190 ரன்களைக் குவித்து சென்னையை வெற்றி கொண்டது டெல்லி அணி.

சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றார் தோனி. ஆட்ட நாயகனாகத் தேர்வான ஷிகர் தவான் ப்ரித்வி ஷாவின் ஆட்டத்தை புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன