மமதாவின் 18 ஆண்டு சபதம்


 




தேதி: மே 12, 2011. இடம்: கொல்கத்தாவின் காளிகாட்டில் மம்தா பானர்ஜியின் ஓட்டு வீட்டின் கூரை

2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் வந்து கொண்டிருப்பதால், வீட்டிற்கு வெளியே ஆயிரக்கணக்கான திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே உற்சாகம் அதிகரித்திருந்தது.

ஆனால் மமதா பானர்ஜியின் முகம் மிகவும் அமைதியாக இருந்தது. காங்கிரஸிலிருந்து பிரிந்து ஒரு தனி கட்சியைத் தொடங்கி, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இடதுசாரிகளை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறக் கூடிய வாய்ப்பு நெருங்கியது.

மேலும், அவரது பழைய உறுதிமொழி ஒன்றும் நிறைவேற்றப்படவிருந்தது.

டி.எம்.சி மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தபோதும், மமதா அதைக் கொண்டாடுவதற்குப் பதிலாக திட்டமிடத் தொடங்கினார். அப்போது அவர் இந்திய ரயில்வே அமைச்சராக இருந்தார், சட்டமன்ற தேர்தலில் கூட போட்டியிடவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இரவு முழுவதும் தனது நெருங்கிய உதவியாளர்களுடன் புதிய அரசு எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த திட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு மிகவும் நெருக்கமான சோனாலி குஹா முன்னர் இதைக் கூறினார்.

ஆனால் இப்போது, தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் கோபம் கொண்ட சோனாலி, பாஜகவில் இணைந்து விட்டார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மமதாவின் நடவடிக்கைகள் சற்று கடுமையாகவே இருந்தன. "இது தாய், தாய் மண், மற்றும் மானிடத்தின் வெற்றி. இது மேற்கு வங்க மக்களுக்குக் கொண்டாடப்பட வேண்டிய தருணம் தான். ஆனால், ஆனால் அதே நேரத்தில், இந்த நாளுக்காகக் கடந்த மூன்று தசாப்தங்களில் தியாகம் செய்தவர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்," என்று அவர் உரையாற்றினார்.

அப்படி என்ன சத்தியம் செய்திருந்தார் மமதா?

மம்தா

பட மூலாதாரம்,STR

ஜூலை 1993 இல், அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது, மாநிலச் செயலகத்தின் ரைட்டர்ஸ் கட்டட இயக்கத்தின் போது, 13 இளைஞர்கள் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

அந்த நிகழ்வின் போது, மமதாவிற்கும் காயம் ஏற்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் அதே ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி, நாடியா மாவட்டத்தில் காது கேளாத வாய் பேச முடியாத ஒரு சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை எதிர்த்து, அப்போதைய முதல்வர் ஜோதி பாசுவைச் சந்திக்க, அவரது அறைக் கதவின் முன் ஒரு தர்னாவில் அமர்ந்தார்.

அரசியல் தொடர்புகள் காரணமாகவே குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று மமதா குற்றம்சாட்டினார். அப்போது அவர் மத்திய இணை அமைச்சராக இருந்தார், ஆனால் பாசு அவரைச் சந்திக்கவில்லை.

பாசு வரும் நேரம் பார்த்து, மமதா அமைதியாகவே அமர்ந்திருந்த போதிலும், அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்ற போது அவர் அதற்கு இசையவில்லை. அதனால் அவரையும் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணையும் மகளிர் காவலர்கள் படிக்கட்டுகளில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அங்கிருந்து அவர்களை காவல்துறைத் தலைமையிடமான லால் பஜாருக்கு அழைத்துச் சென்றனர்.

இதில், அவர்களின் ஆடைகளும் கிழிந்தன. முதலமைச்சரான பிறகே, நான் மீண்டும் இந்த கட்டடத்தில் காலடி எடுத்து வைப்பேன் என்று அன்று அங்கு மமதா சத்தியம் செய்தார்.

அந்த வைராக்கியத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்தார். இறுதியாக, 2011ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிவப்பு கட்டடத்தில் முதல்வராக மீண்டும் நுழைந்தார்.

மமதாவின் அரசியலால் மிகவும் எரிச்சலடைந்த முன்னாள் முதலமைச்சர் ஜோதி பாசு, அவரது பெயரை ஒருபோதும் பொது வெளியில் குறிப்பிட்டதில்லை. மமதாவை, "அந்தப் பெண்மணி" என்று தான் அவர் குறிப்பிட்டார்.

போராடும் குணம்

மம்தா

பட மூலாதாரம்,DESHAKALYAN CHOWDHURY

மமதா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கை முழுவதும் இது போன்ற பல சம்பவங்களால் நிரம்பியுள்ளது. 1990இல் சிபிஎம் செயல்பாட்டாளரான லாலு ஆலம் தரப்பிலிருந்து இவர் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலாகட்டும் அல்லது சிங்கூரில் டாடா நிறுவனத்தின் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக 26 நாள் உண்ணாவிரத போராட்டமாகட்டும்.

இவர் கடந்து வந்த பாதை முட்பாதை தான். இதுபோன்ற ஒவ்வொரு சம்பவமும் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று மாநிலம் தழுவிய பந்தின் போது, காங்கிரஸின் உத்தரவின் பேரில், ஹாஜ்ரா மோடில், லாலு ஆலம் ஒரு கட்டையால் மமதாவின் தலையில் தாக்கினார்.

இதில், அவரது மண்டை உடைந்த போதிலும், தலையில் ஒரு கட்டுடன், அவர் மீண்டும் சாலையில் போராட்டத்தில் இறங்கினார். மமதாவுடன் நெருக்கமாக அரசியல் பணியாற்றிய சௌகத் ராய் விளக்குகிறார், "மமதா உயிர் பிழைப்பது கடினம் என்று நாங்கள் மனதில் ஏற்றுக்கொண்டு விட்டோம். ஆனால் வாழ வேண்டும் என்ற அவரது இச்சையும் மாநில மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணமும் தான் அவரைக் காப்பாற்றியது.

'தீதி: தி அன்டோல்ட் மமதா பானர்ஜி' என்ற தலைப்பில் மமதாவின் வாழ்க்கை சரிதையை எழுதிய பத்திரிகையாளர் சுதபா பால், "நாட்டின் மன வலிமை பெற்ற பெண் தலைவர்களில் மமதாவும் ஒருவர் எனறு குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புத்தகத்தில், "அரசியலில் தனித்துவமான தன்மை மற்றும் போராட்ட குணம் காரணமாக, தீதி தனது வாழ்க்கையில், முன்னர் கற்பனை செய்து கூட முடியாத பல விஷயங்களைச் சாத்தியமாக்கியுள்ளார்.

இடது சாரி அரசாங்கத்தை அரியணையில் இருந்து இறக்குவதும் இதில் அடங்கும். " என்று குறிப்பிட்டுள்ளார்.மமதாவின் அரசியல் பயணம் குறித்த 'டிகோடிங் திதி' என்ற புத்தகத்தை எழுதிய ஒரு பத்திரிகையாளர் டோலா மித்ரா கூறுகையில், "தீதி என்று பிரபலமாக அறியப்படும் மம்தா பானர்ஜி போன்று நாட்டின் வேறு எந்த பெண் தலைவரின் செயல்பாடுகளிலும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதுதான் இவரது கவர்ச்சி அவரது மந்திர ஆளுமை," என்று வியக்கிறார்.

இந்த இரண்டு புத்தகங்களிலும், மமதாவின் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து 2011 ஆம் ஆண்டில் முதல்முறையாக முதல்வராக பதவியேற்றது வரையிலான பயணம் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் சமீரன் பால், "எளிமை மம்தாவின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

அவர் மத்திய அமைச்சராக இருந்தாலும் மாநில முதல்வராக இருந்தாலும், ஒரு வெள்ளை நிறப் பருத்திச் சேலை, சாதாரண ஹவாய் செருப்புடன் தான் இன்றும் இருக்கிறார். "முதல்வரான பிறகும் அவரது உடையில் அல்லது வாழ்க்கை முறையில் எந்த வித்தியாசமும் இல்லை.

மம்தா

பட மூலாதாரம்,DESHAKALYAN CHOWDHURY

தனிப்பட்ட அல்லது பொது வாழ்க்கையில் அவரின் வாழ்க்கை முறை மற்றும் நடத்தை பற்றி எந்த கேள்வியும் கேட்க முடியாது. " என்று கூறுகிறார். பேராசிரியர் பால் விளக்குகிறார், "மம்தாவின் மிகப் பெரிய பண்பு என்னவென்றால், அவர் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தலைவர்.

சிங்கூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணா மற்றும் உண்ணாவிரதப் போராட்டமாக இருந்தாலும் சரி, நந்திகிராமில் காவல் துறையினரின் தோட்டாக்களுக்கு பலியானவர்களுக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, களத்தில் இருந்து போராடும் குணம் கொண்டவர் மம்தா."

சாலை முதல் செயலகம் வரை

திரிணாமுல் காங்கிரஸ் உருவாக்கப்படும் முன்பிருந்தே, மம்தா பானர்ஜியின் அரசியலை உன்னிப்பாகக் கவனித்து அறிக்கை அளித்து வரும் மூத்த பத்திரிகையாளர் தாபஸ் முகர்ஜி, "தற்கால அரசியலில் வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் எழும் மன உறுதி கொண்ட மம்தா போன்ற ஒரு தலைவரைப் பார்ப்பது அரிது.

தோல்வி கண்டு அஞ்சாது, இரட்டை வலிமையுடனும் உற்சாகத்துடனும் அவர் தனது இலக்கை நோக்கிப் பயணிக்கிறார். "இதற்கு 2006 சட்டமன்றத் தேர்தலை உதாரணமாக முகர்ஜி காட்டுகிறார். அந்த நேரத்தில், ஊடகங்கள் முதல் அரசியல் வட்டாரங்கள் வரை, மம்தாவின் கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி என்று கருதப்பட்டது.மம்தாவே கூட தனது இரண்டு விரல்களை உயர்த்தி, வெற்றிக் குறியை மதினிப்பூரில் பத்திரிகையாளர்களிடம் காட்டியிருந்தார். அடுத்த கூட்டம் ரைட்டர்ஸ் கட்டடத்தில் இருக்கும் என்றும் கூறினார்.

மம்தா

பட மூலாதாரம்,THE INDIA TODAY GROUP

ஆனால் பேரணிகளில் மிகப்பெரிய கூட்டம் கூடிய போதிலும், தேர்தலில் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனையடுத்து மமதா இடதுசாரிகளின் 'விஞ்ஞான மோசடி' இது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் அன்றே அவர் 2011 தேர்தலுக்குத் தயாராகத் தொடங்கினார். நந்திகிராம் மற்றும் சிங்கூரில் நிலம் கையகப்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவை ஒரு மிகப் பெரிய பிரச்னையாக்கி, அடுத்த களத்துக்குக் கட்சியைத் தயார் படுத்தினார்.

தாபஸ் முகர்ஜி , "2004 மக்களவை தேர்தலில் மமதா தன்னந்தனியாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக கட்சியின் பிரதிநிதியாக இருந்தார். ஆனால் 2009இல் அவர் கட்சி இடங்களின் எண்ணிக்கையை 19 ஆக உயர்த்தினார்" என வியக்கிறார்.

மமதா பானர்ஜியின் தீவிர எதிரிகள் கூட, காங்கிரஸில் தனது முக்கியத்துவம் மற்றும் கொள்கை மோதலுக்குப் பிறகு, ஒரு புதிய கட்சியை உருவாக்கி, 13 ஆண்டுகளில் மாநிலத்தில் உறுதியாக வேரூன்றியிருந்த இடதுசாரி அரசாங்கத்தைத் தோற்கடித்து சாலையிலிருந்து செயலகம் வரை உயர்ந்த அந்த அதிசயத்தை வியக்காமல் இருக்க முடியாது. இதை விட இவரின் ஆளுமைக்குச் சிறந்த சான்று ஒன்று இருக்க முடியுமா?

மாநில காங்கிரஸ் தலைவரின் தேர்தலில் மம்தாவைத் தோற்கடித்த சோமன் மித்ராவும் பின்னர் மம்தாவின் உறுதி கண்டு வியந்தார். அவரே, பின்னர் காங்கிரஸை விட்டு வெளியேறி டி.எம்.சியில் சேர்ந்தார், எம்.பி.யும் ஆனார். நீண்ட காலமாக டி.எம்.சியைத் தொடர்ந்து செய்தி சேகரித்து வரும் மூத்த பத்திரிகையாளர் புலகேஷ் கோஷ், மம்தாவின் இரத்தத்தில் உள்ள பிடிவாதம் மற்றும் போராட்ட குணம் தான் இதற்குக் காரணம் என்கிறார்.

மம்தா

பட மூலாதாரம்,DESHAKALYAN CHOWDHURY

மேலும், "அவர் இந்தப் போர்க்குணத்தைத் தனது ஆசிரியரும் சுதந்தரப் போராட்ட வீரருமான பிரமிலேஷ்வர் பானர்ஜியிடமிருந்து பெற்றார். இந்தக் குணங்களால் தான் 1998 ல் காங்கிரசுடனான தனது உறவை முறித்துக் கொண்டு திரிணாமுல் காங்கிரஸை நிறுவினார், 13 ஆண்டுகளுக்குள், பல தசாப்தங்களாக மாநிலத்தில் வேரூன்றியிருந்த இடது முன்னணியின் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து தனது கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்தார்." என்று அவர் கூறுகிறார்.

புலகேஷ் கோஷ், "2016 சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களும் வாக்குகளும் அதிகரித்தன என்றால் அதற்குக் காரணம் மம்தாவிடம் இருந்த ஈர்ப்பு சக்தி தான். சிங்கூர் மற்றும் நந்திகிராமில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வெகுஜன இயக்கங்கள் ஒரு போர்க்குணமிக்க தலைவராக இவர் பரிணமிக்க வழிவகுத்தது. மமதாவின் பிம்பம் உயர்ந்தது. டி.எம்.சியின் அதிகார மையமான ரைட்டர்ஸ் கட்டடத்தை அடைவதற்கான வழியும் திறக்கப்பட்டது. "

அரசியல் பயணம்

மமதா பானர்ஜியின் அரசியல் பயணம் 1976 ஆம் ஆண்டில் அவரது 21 வயதில் மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகத் தொடங்கியது.1984 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக, மம்தா தனது நாடாளுமன்ற பயணத்தில் களமிறங்கினார்.

சிபிஐ-எம் மூத்த தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை வென்று தனது முதல் அடியை எடுத்து வைத்தார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், இவர் இளைஞர் காங்கிரசின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் 1989 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் எதிர்ப்பு அலை காரணமாகத் தோல்வியடைந்தார்.

மம்தா

பட மூலாதாரம்,RAVEENDRAN

ஆனால் அதில் விரக்தியடையாமல், மேற்கு வங்க அரசியலில் தனது கவனத்தை செலுத்தினார்.

1991ஆம் ஆண்டு தேர்தலில் அவர் மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு, அவர் வாழ்வில் பின்னடைவே இல்லை. அந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் இளைஞர் நல மற்றும் விளையாட்டு அமைச்சின் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

ஆனால் இரண்டு வருடங்கள் மட்டுமே மத்திய அமைச்சராக இருந்தபின், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் மம்தா ஒரு பெரிய பேரணியை ஏற்பாடு செய்து அமைச்சரவையில் இருந்து விலகினார்.

சிபிஐ-எம் அட்டூழியங்களுக்குப் பலியான காங்கிரஸ்காரர்களுக்கு ஆதரவாகத் தான் இருக்க விரும்புவதாக அவர் உறுதியாக இருந்தார். தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, இடதுசாரிகளை மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே மமதாவின் ஒரே நோக்கம் என்றும் இதற்காக, அவர் தனது உதவியாளர்களை பல முறை மாற்றியுள்ளார் என்றும் கோஷ் விளக்குகிறார்.

மம்தா

பட மூலாதாரம்,INDIA TODAY GROUP

அவர் என்.டி.ஏ, காங்கிரஸ் இருவருடனும் இணைந்து மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில், டைம் பத்திரிகை அவரை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் சேர்த்தது.மம்தாவை ஒரு விசித்திரமான சுயநலமிக்க அரசியல்வாதியாக உருவகப்படுத்தும் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் நடந்துள்ளன.

மம்தா ஒரு சர்வாதிகாரி என்றும் தன்னைக் குறித்த விமரிசனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், அவரது மருமகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியைக் கட்சியில் உயர்த்தியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஊழல்வாதி தலைவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது உட்பட பல கேள்விகள் மமதா மீது எழுப்பப்பட்டுள்ளன.ஆனால் அவருக்கு எதிரான மிகக் கடுமையான குற்றச்சாட்டு சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துகிறார் என்பதாகும். அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. அவர் ஒரு கவிஞர், எழுத்தாளர் மற்றும் ஓவியர். கடந்த சட்டமன்றத் தேர்தலில், கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்காகத் தனது ஓவியங்களை விற்று லட்சக்கணக்கான ரூபாய்களை ஈட்டினார்.

இருப்பினும், பின்னர் அந்த ஓவியங்களை வாங்கியவர்கள் யார் என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. எதிர்கட்சிகளும் மமதாவைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தின. அந்த ஓவியங்களை வாங்கியவர்களில் மாநிலத்தின் பல சிட் ஃபண்ட் நிறுவனங்களின் உரிமையாளர்களும் இருந்தனர்.

முதல்வரான பிறகு, அவரது கவிதைகள் மற்றும் கதைகள் பல வெளிவந்துள்ளன. அவரது உரைகளிலும் அவர் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஷரத் சந்திரரை அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.

மேற்கு வங்கத்தில் கடந்த தசாப்தத்தின் மிக முக்கியமான இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து வகையான சவால்களுக்கு மத்தியில் இந்த முறை மமதாவுக்குத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த தேர்தலில் முகுல் ராய், சுகேந்து ஆதிகரி உள்ளிட்ட பல வலுவான கூட்டாளிகள் அவருடன் இல்லை. "மமதாவின் வலிமை மம்தா தான். இதுவரை அவரது அரசியல் வாழ்க்கை சென்ற பாதையை மட்டும் மனதில் வைத்து, அவரைக் குறைத்து மதிப்பிடுவது தவறு." என்கிறார் தாபஸ் முகர்ஜி.