பின்னடைவை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோதி



 பொதுவாக நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, தன் மீது வைக்கப்படும் விமர்சனத்தை கண்டு கொள்ளாது அல்லது விமர்சிப்பவர்கள் மீதே எதிர் விமர்சனத்தை வைத்து தன் மீதான விமர்சனத்தை மழுங்கடிக்கும்.

கொரோனா வைரஸ் இந்திய சுகாதார கட்டமைப்பின் மீது மிக அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொரோனா நெருக்கடியை மத்திய அரசு கையாண்ட விதத்தை குறித்து மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதும், பாரதிய ஜனதா கட்சி மேலே குறிப்பிட்டது போலவே தன் மீதான விமர்சனங்களை எதிர்கொண்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் போதிய சிகிச்சை பெற முடியாமல், ஆக்சிஜன் பெற முடியாமல் மருத்துவமனைகளில் படுக்கை வசதியை பெற முடியாமல் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிருந்த போதும், மத்திய அமைச்சர்கள் மருத்துவ வசதிகளில் எந்தவித பற்றாக்குறையும் நிலவவில்லை என மறுத்தனர்.

மருத்துவ சிகிச்சைக்காக சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்கள் வெறுமனே பொய்யான செய்திகளையும் பயத்தையும் பரப்புவதாக சில ஆளும் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

ஏற்கனவே இந்திய சுகாதார கட்டமைப்பு திணறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்படி அரசு எதிர்வினை ஆற்றுவது நீண்ட காலத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரியவில்லை. தினம் தோறும் இந்தியாவில் லட்சக்கணக்கான பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் பெரும் கவலையை உண்டாக்கி இருக்கிறது.

இதற்கெல்லாம் யார் பொறுப்பு என மக்கள் கேட்கிறார்கள். கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கருதுகிறார்கள் மக்கள்.

நரேந்திர மோதி தலைமையிலான அரசின் மீதான விமர்சனங்கள் வரலாறு காணாத அளவுக்கு வலுவடைந்து இருக்கின்றன. முதல்முறையாக நரேந்திர மோதி மற்றும் அவரது சகாக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் அழுத்தமாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.

மோதி ராஜினாமா விமர்சனத்தை முன்வைக்கும் கொரோனா நெருக்கடி

ட்விட்டர் டிரெண்டிங்

பட மூலாதாரம்,BBC MONITORING

கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோதி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், பலமுறை ஊடகங்கள், மக்கள் கூட்டமைப்புகள், எதிர்க்கட்சியினர் என பல தரப்பில் இருந்து பல கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டிருக்கிறது.

உதாரணமாக கடந்த 2015 - 16 ஆண்டு காலகட்டத்தில் மைனாரிட்டிகள் மீது இந்து குழுக்கள் நடத்திய தாக்குதல்கள், 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, அதே ஆண்டில் சிஏஏ சட்டத்தை கொண்டு வந்தது, 2020 ஆம் ஆண்டில் சர்ச்சைக்கு உள்ளான 3 புதிய வேளாண் மசோதாக்களை கொண்டு வந்தது என பல சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

கொரோனா நெருக்கடியை மோதி தலைமையிலான அரசு சரியாக கையாளவில்லை என்கிற விஷயத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்களில், அவ்விமர்சனத்தின் தீவிரத்தன்மை மற்றும் தொனி கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

மோதி வெளியேற்றப்பட வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என மிக அரிதாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. தற்போது அவ்விரு விமர்சனங்களும் ட்விட்டரில் கடந்த சில நாட்களாக டிரெண்டாகிக் கொண்டு இருக்கின்றன.

மோதி ராஜினாமா (#ResignModi), பிரதமர் மோதி ராஜினாமா (#Resign_PM_Modi), மோதி கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும் (#ModiMustResign), மோதியை வெளியேற்றுங்கள் தேசத்தை காப்பாற்றுங்கள் (#ModiHataoDeshBachao) என பல ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் கடந்த பல நாட்களாக டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன.

மோதி ராஜினாமா டிரெண்ட்

பட மூலாதாரம்,BBC MONITORING

பொதுவாக பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பரிவு சமூக வலைதளங்களில் எழும் இதுபோன்ற விமர்சனங்களை மிக விரைவாக எதிர்கொண்டு அடக்கிவிடும். ஆனால் தற்போது எழும் மிகக் கடுமையான விமர்சனங்களை அடக்க முடியாமல் திணறுவது போல தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் வெளிப்பட்ட அரசுக்கு எதிரான உணர்வு தற்போது பிரதான ஊடகங்கள், விமர்சகர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியிலும் பரவி இருப்பதாக தெரிகிறது.

பொதுவாகவே மோதி அரசை விமர்சிக்கும் ஆங்கில நாளிதழான `தி டெலிகிராஃப்’, அரசின் முக்கிய தலைவர்கள் வெளியேற வேண்டுமென மிகக் கடுமையாக தன் கருத்தை தெரிவித்திருக்கிறது.

"இதை மிக எளிமையாக கூறுவது நல்லது: நரேந்திர மோதி வெளியேற வேண்டும். அமித் ஷா வெளியேற வேண்டும். அஜய் மோகன் பிஸ்த் எனப்படும் யோகி ஆதித்யநாத் வெளியேற வேண்டும்" என தெரிவித்திருக்கிறது.

"நாம் பிழைத்திருக்க தேவையான விஷயங்களை செய்யவும், இருக்கும் அமைப்பை சரி செய்யவும் இவர்கள் அதிகார மையத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்" என கூறி உள்ளது டெலிகிராஃப் பத்திரிகை.

இந்திய தேசிய காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற சில எதிர் கட்சிகளும், பிரதமர் நரேந்திர மோதி பதவி விலக வேண்டும் என சமூக வலைத்தளங்களில் எழுந்த கருத்தை வழிமொழிகின்றன.

இந்தியாவின் சுதந்திர ஊடகங்களின் கடுமையான விமர்சனங்கள்

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பல முன்னணி நாளேடுகளின் தலையங்கங்கள் மற்றும் கருத்துரை பகுதிகளில் இந்தியாவின் சுகாதார அமைப்பு சீர்குலைந்து போனதற்கு மோதியும் அவரது அரசும் தான் காரணம் என கூறியுள்ளார்கள்.

"இந்த பெருந்தொற்றின் பேரழிவுக்கு அரசின் மிகப்பெரிய வரலாறு காணாத தோல்வி தான் காரணம்" என ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறது.

அதோடு அரசின் மீது விமர்சனங்கள் வைக்கப் படுவதையும் கட்டுப்படுத்துவதாக குற்றம் சாட்டி இருக்கிறது. கொரோனா பெருந்தோற்று குறித்து எதிர்மறை எண்ணங்களை பரப்புபவர்களாக கருதப்பட்டால் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என உத்திரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு சமீபத்தில் எச்சரித்ததையும் அந்த கருத்துரையில் குறிப்பிட்டிருக்கிறது.

சில முன்னணி இந்தி மொழி நாளேடுகளும், நரேந்திர மோதி அரசு மீது வலுவான விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றன. உதாரணத்துக்கு தைனிக் பாஸ்கர் என்கிற நாளேட்டின் தலையங்கத்தில் "மருந்துகள், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றாக்குறைக்கு அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லாததே காரணம்" என கூறி உள்ளது.

ஒட்டுமொத்த நாடே கொரோனாவால் தவித்துக் கொண்டிருக்கும் போது அரசு களத்தில் இறங்கி செயல்படவில்லை என இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான சேகர் குப்தா தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

"இதுபோல அரசு செயல்படாமல் இருந்ததை இந்தியா ஒரு போதும் கண்டதில்லை. அவசர உதவிக்கு அழைக்க எந்தவித கட்டுப்பாட்டு அறை எண்களும் இல்லை. உதவிக்கு அழைக்க பொறுப்பானவர்கள் யாரும் இல்லை. இது அரசின் நிர்வாக தோல்வி" என தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு இருக்கிறார்.

அரசை ஆதரிக்கும் ஊடகத்தின் மற்றொரு சாரார்

சமூக வலைதளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் ஒருசாரார் அரசை பலமாக விமர்சித்து கொண்டிருக்கும் போது, அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி சேனல்கள் மோதி அரசின் செயல்பாடுகளை ஆதரித்து வருகின்றன.

பல இந்தி மற்றும் ஆங்கில மொழி செய்தி சேனல்கள் கொரோனா நெருக்கடிக்கு காரணம் இந்தியாவில் இருக்கும் 'அமைப்புகளே' என, அவ்வமைப்பை கட்டுப்படுத்துவது யார் என விவரிக்காமல் குறை கூறத் தொடங்கி இருக்கிறார்கள்.

"இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா நெருக்கடிக்கு 'அமைப்பே' காரணம் என்றும், அதையே பொறுப்பாக்க வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோதியோ, அரசோ காரணம் இல்லை" என கூறுமாறு தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


பாஜகவை வலுவாக ஆதரிக்கும் ரிபப்ளிக் டிவி சேனல், இந்த நெருக்கடியன காலகட்டத்தில் அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எதிர்மறை மனநிலை கொண்டவர்கள் என விமர்சித்திருக்கிறது. "தேசம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டு இருக்கும் போது, ஒரு சிறிய விமர்சனக் குழு இந்தியாவின் முயற்சிகளை வீழ்த்த அனுமதிக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளது ரிபப்ளிக் டிவி.

இன்னும் சில ஊடகங்கள் பழியை பல்வேறு மாநிலங்கள் மீது திணிக்கத் தொடங்கி இருக்கின்றன. மாநில அரசுகள் கொரோனா நெருக்கடியை சரியாக கையாளவில்லை, மத்திய அரசின் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என குற்றம் சாட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.

உதாரணமாக, தைனிக் ஜாக்ரன் என்கிற இந்தி மொழி நாளேடு பத்திரிகை மத்திய அரசு மே 01-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தும் திட்டத்தை அறிவித்த பின்னும், குறுகிய எண்ணம் கொண்ட அரசியல் காரணங்களால் சில மாநிலங்கள் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தயங்குவதாக கூறியுள்ளது. இதுவரை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் கொடுக்கப்படாமல் இருக்கும் சூழலில் இந்த விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது அப்பத்திரிகை.