திருமணத்தை எவ்வாறு நடத்தலாம்.? பொலிஸார் வௌியிட்டுள்ள அறிவிப்பு இதோநாட்டில் அதிகரித்துள்ள கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில், இன்றைய தினத்தில் இருந்து அமுலாகும் வகையில் பல தனிமைப்படுத்தல் உத்தரவுகள் செயற்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. 

அதன்பிரகாரம், நாடுமுழுவதும் இன்று (16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இது பொருந்தாது எனவும் அவர் கூறினார். 

அத்துடன், நேற்று (15) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். மேலும், உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானனோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. 

எனினும், இயன்றவரை பொது இடங்களில் நடமாடுவதை தவிர்ந்து கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இதேவேளை, திருமணம் ஒன்றை பதிவு செய்துக் கொள்வதற்காக தடை இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும் எனவும், அவர்களை தவிர்த்து வேறு எவருக்கும் அதில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். 

திருமணங்களை வீட்டிலோ அல்லது திருமண மண்டபத்திலோ நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையிலேயே தனிமைப்படுத்தல் உத்தரவுகள் குறித்து விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்களென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலிருந்து, தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக, இன்று (16) முதல் நாட்டு மக்கள் அனைவரும் சுய பயணக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கோரிக்கை விடுக்கின்றார்.