திருக்கோவில் விநாயகபுரம் மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்வு.


 


வி.சுகிர்தகுமார் 0777113659   


  அம்பாரை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் மகாவித்தியாலயம் கல்வி அமைச்சினால் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்று பாடாசலை சமூகத்திடம் வலயக்கல்வி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு எனும் அரச கொள்கைக்கேற்ப பாடசாலை அமைப்பினுள் தற்போது நடைமுறையில் காணப்படும் பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்படும் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதன் மூலம் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரம் வரை உயர்த்தும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாகவே இப்பாடாசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இன்று இடம்பெற்ற உத்தியோகபூர்வ கடிதம் கையளிக்கும் நிகழ்வில் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டி.வீரசிங்கவின் இணைப்பாளர்களின் ஒருவருமான எஸ்.எம்.ஜெசில் பொதுஜனபெரமுன கட்சியின் முக்கியஸ்தர் வைத்தியர்  ஏ.எல்.எம்.றிபாஸ் மற்றும் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் ஆகியோரினால் குறித்த கடிதம் பாடசாலை அதிபர் உள்ளிட்ட கல்வி சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேநேரம் குறித்த பாடசாலையினை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வலயக்கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் பாடசாலை அதிபர் மற்றும் கல்விச்சமூகம் நன்றியை தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.