ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 20 வயது தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  கல்முனை பிராந்தியத்தில் 20 வயது தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான    தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தலைமையிலான வைத்திய குழுவினரால் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் வாழும் 20 தொடக்கம் 30 வரைக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முதற்தடவையாக முன்னெடுக்கப்பட்டன.
 
இதேநேரம் ஏதோ ஒரு தடுப்பூசியினை ஏற்றிக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான முதலாவது இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன.
 
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தலைமையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.ஜ.ஹைதர் மேற்பார்வையில் இடம்பெற்ற தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையில் பொதுச்சுகாதார பரிசோதகர் ப.கேதீஸ்வரன் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  என பலரும் இணைந்திருந்தனர்.
 
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 5000 இற்கும் மேற்பட்ட 20 வயது தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் வாழும்
 நிலையில் பிரிவு ரீதியாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன.  
 இந்நிலையிலேயே அனைவருக்கும் தடுப்பூசியினை பெற்றுக்கொடுத்து அனைவரையும் இத்தொற்றிலிருந்து காப்பாற்ற சுகாதாரத்துறை அர்ப்பணிப்போடு செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.