"திங்கட்கிழமையின் பின்னரும் நாடு முடக்கப்படும் என்று நான் எண்ணவில்லை!'


 


கொவிட் 19 தொற்றாளர் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதற்கு 4 வாரகால முடக்கம் போதுமானது. எனவே எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னரும் நாடு முடக்கப்படும் என்று நான் எண்ணவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.


நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் போன்றே மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. நான்கு வார கால தனிமைப்படுத்தல் ஊரடங்கின் காரணமாக இந்த வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
சிலர் எவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் குறித்த நான்கு வார கால முடக்கம் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது.

அதே போன்று தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்காக நடமாடும் தடுப்பூசி வழங்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.