இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதல் JR.ஜயவர்தன அவர்களின் 115 ஆவது ஜனன தினம்


 


ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (செப்டம்பர் 17 1906 - நவம்பர் 1 1996), இலங்கையின் இரண்டாவது சனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது சனாதிபதியுமாவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் சனாதிபதிப் பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.


இளமைக் காலம்

இவர் இலங்கையின் சட்டத்துறையில் பிரபலமாக விளங்கிய குடும்பமொன்றில் பிறந்தார். இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த கௌரவ நீதியரசர் இயுஜீன் வில்பிரெட் ஜயவர்தனாவுக்கும், இலங்கையின் செல்வந்த வணிகர்களுள் ஒருவரின் மகளான அக்னசு டொன் பிலிப் விஜயவர்தனாவுக்கும் பிறந்த 11 பிள்ளைகளுள் இவரே முதலாமவர். இராணியின் வழக்கறிஞர் (QC) ஹெக்டர் வில்பிரெட் ஜயவர்தனா, மருத்துவர் ரொலி ஜயவர்தனா ஆகியோர் இவரது தம்பியர்கள். கர்னல் தியடோர் ஜயவர்தனா, நீதியரசர் வலன்டைன் ஜயவர்தனா ஆகியோர் இவரது தந்தையின் உடன்பிறந்தோர். பத்திரிகைத் துறையில் பிரபலமான டி. ஆர். விஜேவர்தனா இவரது மாமா. ஓர் ஆங்கிலேய செவிலித் தாயால் வளர்க்கப்பட்ட இவர்[ கொழும்பில் உள்ள பிசப்கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின் ராயல் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றார். பின் ராயல் கல்லூரி சங்கத்தில் செயலாளராகப் பணிபுரிந்தார்


சனாதிபதிப்  பதவி

1972ம் ஆண்டு, முதலாம் அரசியலமைப்புச் சட்டம் மூலம் சனாதிபதிப் பதவியானது இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் அது ஓர் பெயரளவிலான, எவ்வித ஆட்சி அதிகாரமும் அற்ற ஓர் அலுவலக பதவியாகவே காணப்பட்டது. உண்மையில் இலங்கையின் ஆட்சி அதிகாரமானது அப்போது ஒரு பாராளுமன்ற அமைப்பிலான அரசாங்கத்தின் கீழ் பிரதம மந்திரியிடமே  (சிறிமாவோ பண்டாரநாயக்க) காணப்பட்டது.

1978ம் ஆண்டு இரண்டாம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் படி இம்முறைமை மாற்றப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சிமுறை அமுல் படுத்தப்பட்டது. இத் திருத்தத்தின் படி சனாதிபதிக்கு (ஜே.ஆர். ஜெயவர்த்தன) வழங்கப்பட்ட பலம்மிக்க சக்தி வாய்ந்த ஆட்சி அதிகாரங்கள் இன்றுவரையும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன