நூருள் ஹுதா உமர்
பாடசாலையின் ஆங்கிலப்பாட ஆசிரியர்களின் வழிகாட்டலிலும் நெறிப்படுத்தலிலும் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் வரலாற்றின் முதற் தடவையாக தரம் 5 மாணவர்களினால் தனி ஆங்கில மொழியில் மாணவர் மன்றக்கூட்டம் திங்கட்கிழமை பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளரும், கல்முனை கல்வி வலய ஆங்கிலப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளருமான என்.எம்.ஏ. மலீக் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ், சிறப்பு அதிதியாக கல்முனை கல்வி வலய ஆரம்பக் கல்வி ஆசிரியர் ஆலோசகர் ஏ. சஹறூன் ஆகியோரும் மற்றும் பாடசாலை பிரதி அதிபர் திருமதி கே.எம்.றபீக், உதவி அதிபரும் தரம் 5 பகுதி தலைவருமான எம்.ஏ. சீ.எல். நஜீம், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தரம் 5 மாணவர்கள் பல்தர நிகழ்வுகளை தனியாகவும், குழுவாகவும் ஆங்கிலத்தில் தமது திறமைகளை சரளமாக வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில தினப் போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கும், கல்முனை வலய மட்டத்தில் நடைபெற்ற இறுதி இரு பரீட்சைகளில் ஏதாவது ஒன்றில் 160 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 20 புலமையாளர்களுக்கும் அவர்களை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸின் அனுசரணையில் அதிதிகளால் பதக்கம் அணிவித்து பாராட்டப்பட்டனர்.
விசேடமாக பிரதம அதிதியினால் பாடசாலையின் ஆங்கில ஆசிரியர்களும், மாணவர்களும் ஆங்கில தினப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களும், புலமையாளர்களும் பாராட்டினைப் பெற்றனர்.

Post a Comment
Post a Comment