இலங்கையை 4 விக்கெட்டுகளால் வீழ்த்திய இந்திய அணி தொடரை தன்வசப்படுத்தியது



 


இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி குறைந்த இலக்கையே எட்ட முடியாமல் திணறியது. 


கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி 370-க்கும் அதிகமான ரன்களைக் குவித்த இந்திய அணியும் அதை விரட்டிய இலங்கை அணியும் ஈடன் கார்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் ரன்களை எடுக்கத் தடுமாறின.

இலங்கை அணி 40 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த ரன்களை எட்டுவதற்கு இந்திய அணிக்கு 40-க்கும் அதிகமான ஓவர்கள் தேவைப்பட்டதுடன் 6 முக்கியமான விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இந்திய அணியில் கேஎல் ராகுல் நிதானமாக நீடித்து நின்று ஆடிய ஆட்டமே வெற்றிக்கு உதவியது. கடைசிவரை ஆட்டமிழக்காத அவர் 103 பந்துகளில் 64 ரன்களை எடுத்தார். 

இந்தியப் பந்துவீச்சாளர்கள் இலங்கை அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தியதால் அந்த அணியால் 40 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் இந்திய அணிக்கும் இலங்கை பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்றிருக்கிறது.