பல்துறை ஆளுமை மிக்க ஹாஜா அலாவுதீன் அவர்களின் மறைவு பேரிழப்பு!
-Rishad Bathiudeen
ஓய்வுபெற்ற அதிபரும், பல்துறை ஆளுமை மிக்க கலைஞருமான ஹாஜா அலாவுதீன் அவர்களுடைய ஜனாஸா செய்தி மிகுந்த வேதனையை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...
“மன்னார், தாராபுரத்தைச் சேர்ந்த எனது நெருங்கிய உறவினரான ஹாஜா அலாவுதீன், சர்வதேச அளவில் இலக்கியத் துறையில் பலரது வரவேற்பைப் பெற்றவர்.
1990ஆம் ஆண்டுக்கு முன்னதாக இருந்து இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையின் நாடகத் துறையில் தன்னுடைய பங்களிப்பை வழங்கிய ஒருவர். அதுமட்டுமல்லாமல், ஹாஜா அலாவுதீன் ஒரு சிறந்த கலைஞர், இலக்கியவாதி, எழுத்தாளர் என்பதற்கு அப்பால், எமது தாராபுரம் மக்களின் உள்ளத்தில் வாழ்ந்த ஒருவர் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக, அன்றைய காலத்தில் முஸ்லிம் சேவையில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் ஹாஜா அலாவுதீன் எழுதிய நாடகங்கள் என்று சொன்னால் தாராபுரம் மக்கள் தங்களது பணிகள் எல்லாவற்றையும் வைத்துவிட்டு, இவர் எழுதிய நாடகங்களைக் கேட்பதற்காக மிகவும் ஆர்வத்துடன் வானொலிப் பெட்டிக்கருகில் அமர்ந்துகொள்வார்கள்.
1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வின் பின்னர் நாங்கள் வசித்து வந்த கொத்தாந்தீவு முகாமில் அவரும் எங்களோடு வசித்து வந்தார். அதன்பிற்பாடு அவரது பல பரிணாமங்கள் கலை, இலக்கியத் துறைக்கும் இடம்பெயர்ந்த மக்களுடைய பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் களமாக அமைந்திருந்தது.
அத்துடன், எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உருவாக்கத்தில் மிக முக்கியமான ஒருவராக மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் திகழ்கின்றார். அதுமாத்திரமின்றி, எமது கட்சிக்கான பல பாடல்களை தானாக முன்வந்து, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் எழுதி, எமது கட்சியின் பெயரை அரசியல் தளத்தில் பதிவிடுவதற்கு பெரும் பங்காற்றிய ஒருவர். அதேபோன்று, கட்சியின் சகல முன்னேற்ற முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்கிய ஒருவர் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர்கிறேன்.
ஒரு ஆசிரியராக, அதிபராக சிறந்த கல்விமான்களை உருவாக்குவதற்கு உறுதுணையாக ஹாஜா அலாவுதீன் செயல்பட்டு வந்துள்ளார். “காசிம் சிட்டி” என்ற கிராம உருவாக்கத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களது நலன் குறித்தே அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.
சிறந்த நற்பண்பாளராக, ஒரு ஆசானாக, மக்களை மதிக்கக் கூடியவராக, ஒரு நல்ல நண்பராக ஹாஜா அலாவுதீனை நான் பார்க்கின்றேன். அவரது பிரிவானது எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் எமது மக்களுக்கும் பெரும் இழப்பாகும்.
மர்ஹூம் ஹாஜா அலாவுதீனின் இழப்பில் கவலை கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மன ஆறுதலையும் இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையினையும் வழங்க வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மன்னரை வாழ்வுக்காகவும் ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்மிகு சுவன வாழ்வுக்காவும் பிரார்த்திக்கின்றேன்.
ஆமீன்..!
#RishadBathiudeen #பிர்தௌஸ்


Post a Comment
Post a Comment